Published : 06 May 2021 01:45 PM
Last Updated : 06 May 2021 01:45 PM
தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஆக்சிஜன் தேவைப்படும் விவரங்களைத் தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க துணை ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மருத்துவமனை நிர் வாகத்தை கண்டித்து மருத்துவர்களும், செவிலியர்களும் போராட்டம் நடத்தினர்
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த வெரோனிகா மேரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''திருச்சியில் பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் 3 பிளான்ட்கள் உள்ளன. இந்த இடங்களில் ஒரு மணி நேரத்தில் 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். ஆனால், 2003ஆம் ஆண்டிலிருந்து ஆக்சிஜன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இதனால் அந்த பிளான்ட்கள் செயல்படாமல் உள்ளன.
இந்தியாவில் கரோனா 2-ம் அலை வேகமாகப் பரவி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் கிடைக்காமல் கரோனா தொற்றாளர்கள் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிப்பை மீண்டும் தொடங்கலாம்.
இந்தியாவில் புனே, ஹைதராபாத்தில் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கரோனா தடுப்பூசிகளை இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்க உத்தரவிட வேண்டும்.
செங்கல்பட்டில் மத்திய அரசுக்குச் சொந்தமான தடுப்பூசி தயாரிக்கும் எச்எல்எல் பயோடெக் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரித்தால் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்துக்கு விரைவில் கரோனா தடுப்பூசி கிடைக்கும். இதனால் இங்கு கரோனா தடுப்பூசி தயாரிக்கவும் உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ''செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிகழ்ந்த சம்பவத்தைப் பார்க்கும்போது தமிழகத்தில் ஆக்சிஜன் தேவையின் முக்கியத்துவம் தெரிகிறது.
இதனால் தமிழகத்தில் மாவட்டம் வாரியாக ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது, தமிழகத்தில் எத்தனை ஆக்சிஜன் தயாரிப்பு மையங்கள் செயல்படாமல் உள்ளன, இதில் எத்தனை மையங்களை உடனடியாகச் செயல்படுத்த முடியும், செங்கல்பட்டு எச்எல்எல் பயோடெக் நிறுவனத்தில் கரோனா தடுப்பூசி தயாரிக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டு விசாரணையை மே 19-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT