Published : 06 May 2021 12:51 PM
Last Updated : 06 May 2021 12:51 PM
ஸ்டாலின் எந்த நாளும் முதல்வராகும் வாய்ப்பில்லை எனப் பேட்டி அளித்திருந்த மு.க.அழகிரி, திடீரென 'என் தம்பி முதல்வராவதில் எனக்குப் பெருமை' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுகவில் கருணாநிதியின் மகன்கள் மு.க.அழகிரி, ஸ்டாலின், மகள் கனிமொழி நேரடி அரசியலில் உள்ளனர். மதுரையில் 1980களில் சென்று குடியேறிய மு.க.அழகிரி அங்கு செல்வாக்கு மிக்கவராக இருந்தார். பின்னர் திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராகப் பதவி வகித்தார். தென் மாவட்டங்களில் திமுக வெற்றிக்குக் காரணமாக இருந்தார். ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்தார்.
திமுகவின் அடுத்த தலைமை யார் என்பதில் இருவருக்கும் போட்டி இருந்தது. இதற்கிடையில் ஸ்டாலின் திமுக பொருளாளர் ஆனார். இதற்கிடையே ஸ்டாலினுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுத்தது குறித்து கட்சித் தலைவருடன் மோதல் போக்கில் ஈடுபட்ட மு.க.அழகிரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் சிறிது காலம் ஒதுங்கியிருந்தார்.
தந்தை கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது சென்னை வந்து சந்தித்தார். அவரது மறைவின்போது அனைவரும் ஒன்றாகக் கூடினர். இதனால் மீண்டும் ஒற்றுமை ஏற்படும், அழகிரிக்குப் பழையபடி கட்சியில் பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஸ்டாலின் திமுக தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு அழகிரி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் விரிசல் அதிகமானது. இடையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் கட்சி ஆரம்பிப்பது குறித்து அறிவிப்பதாகக் கூறினார். ஆனால், திடீரெனப் பின்வாங்கினார். ''ஸ்டாலின் எந்தக் காலத்திலும் முதல்வர் ஆக முடியாது. இப்படியே போஸ்டர் ஒட்ட வேண்டியதுதான்'' என்று பேட்டி அளித்தார். இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்டாலின் நாளை முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.
இதையடுத்து இன்று மு.க.அழகிரி தனது தம்பி ஸ்டாலின் முதல்வராவதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“முதல்வராக உள்ள ஸ்டாலினைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். என் தம்பி முதல்வராவதில் பெருமை. எனது தம்பியான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார்” என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
அழகிரியின் வாழ்த்து மூலம் திமுகவில் அழகிரி, ஸ்டாலின் இடையே மீண்டும் இணக்கம் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT