Published : 06 May 2021 11:37 AM
Last Updated : 06 May 2021 11:37 AM
விழுப்புரம் அதிமுக மாவட்டச் செயலாளராக சி.வி.சண்முகமும், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளராக குமரகுருவும் பதவி வகித்து வருகின்றனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள 11 தொகுதிகளில் இவர்களால் சிபாரிசு செய்யப்பட்ட 3 அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்ற நிலையில், சி.வி.சண்முகமும், குமரகுருவும் திமுக வேட்பாளர்களிடம் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர்.
கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட 11 தொகுதிகளில் அதிகபட்சமாக விக்கிரவாண்டி தொகுதியில் 42,432 வாக்குகளும், குறைந்தபட்சமாக ரிஷிவந்தியத்தில் 8,148 வாக்குகளும் பெற்றது. ஆனால், விழுப்புரம் தொகுதியில் 36,456 வாக்குகளும், உளுந்தூர்பேட்டை தொகுதியில் 20,233 வாக்குகளும் பெற்றது. ஆனாலும் கடந்த தேர்தலில் இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. தற்போது பாமக கூட்டணியில் இருந்தும் சி.வி.சண்முகமும், குமரகுருவும் எப்படி வெற்றி வாய்ப்பை இழந்தார்கள் என அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டோம்.
''விழுப்புரம் தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவும், பாமகவும் பெற்ற வாக்குகள் 1,05,877. உளுந்தூர்பேட்டை தொகுதியில் 1,01,426 வாக்குகள் பெற்றன. இத்தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் அதிமுக கூட்டணி 87,403 வாக்குகள் பெற்றுள்ளது. அதாவது 18,474 வாக்குகளைக் குறைவாகப் பெற்றுள்ளது. அதே நேரம் உளுந்தூர்பேட்டையில் அதிமுக கூட்டணி 8,769 வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றுள்ளது. விழுப்புரம் தொகுதியில் சி.வி.சண்முகம் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு அதிமுக மற்றும் பாமகவின் வாக்குகள் திமுகவிற்குச் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இரு வேட்பாளர்களும் கடந்த காலத்தில் ஒரே கட்சியில் இருந்தவர்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவரகள் என்பதாகவும் இருக்கக்கூடும்.
ஆனால் உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக கூட்டணி கடந்த தேர்தலை விட 8,769 வாக்குகள் கூடுதலாகப் பெற்றும், 5,256 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மணிக்கண்ணனிடம் அதிமுக வேட்பாளரான குமரகுரு தோல்வியைத் தழுவியுள்ளார். இதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்தால், கள்ளகுறிச்சி வேட்பாளரை மாற்றக்கோரி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால், அதற்குத் தலைமை செவிசாய்க்கவில்லை. கள்ளக்குறிச்சியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு, குமரகுரு சிபாரிசு செய்து சீட் வாங்கிக் கொடுத்தார்.
இதனால் அதிமுகவினருக்கு அதிருப்தி ஏற்பட்டது. மேலும் முன்னாள் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவுக்கும், குமரகுருவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் அமமுகவில் இணைந்து பணியாற்றி, பின் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஆனால் அவருக்கு இத்தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் குமரகுரு தோற்றதற்கு முழுக் காரணம் அதிமுகவினரின் கோஷ்டி அரசியல்தான்'' என்று அதிமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT