Published : 06 May 2021 03:12 AM
Last Updated : 06 May 2021 03:12 AM
கோவையில் தனியார் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் தேவைக்கேற்ப ஆக்சிஜன் விநியோகம் இல்லை. கேரள அரசிடம் தமிழக அரசு பேசிபோதுமான அளவு திரவ ஆக்சிஜனை பெற்றுத்தர வேண்டும் எனதனியார் ஆக்சிஜன் விநியோகஸ்தர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து தினந்தோறும் வீடு திரும்புவோரின் எண்ணிக்கை சராசரியாக 1,200 ஆக உள்ளது. ஆனால், தினசரி பாதிப்பு 1,500-ஐ கடந்து வருகிறது. தற்போது 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அரசு, தனியார் மருத்துவமனைகள், தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைபெற்று வருகின்றனர். மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் பெரும் பாலும் நிரம்பிய நிலையிலேயே உள்ளன.
காலியிடம் என்பது மிகக் குறைவாக உள்ளது. இதனால், ஆக்சிஜனுக்கான தேவை கடந்த ஒருவாரமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெருந்துறையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் இருந்து கோவை அரசு மருத்துவமனை, சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கிடைத்து வருகிறது. ஆனால், தனியார் மருத்துவமனைகளின் தேவைக்கேற்ப ஆக்சிஜன் விநியோகம் இல்லை.
இதுதொடர்பாக கோவையில் உள்ள தனியார் ஆக்சிஜன் விநியோகஸ்தர்கள் கூறியதாவது: கரோனா தொற்றுடன் அதிக நுரையீரல் பாதிப்பு உள்ளவர் களுக்கு ‘ஹை ஃபுளோ ஆக்சிஜன்’ அளிக்கின்றனர். சாதாரணமாக ஒரு நோயாளிக்கு நிமிடத்துக்கு 4 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படும். இதே ‘ஹை ஃபுளோ ஆக்சிஜன்’ அளித்தால் ஒரு நிமிடத்துக்கு 60 லிட்டர் வரை தேவைப்படும். நோயாளியின் பாதிப்புக்கு ஏற்ப ஆக்சிஜன் தேவை அதிகரிக்கிறது.
கேரள மாநிலம் கஞ்சிக்கோட்டில் இருந்து கோவையில் உள்ள ஆக்சிஜன் விநியோகஸ்தர்களுக்கு மருத்துவம், தொழில்துறை தேவைக்காக தினமும் 20 டன் திரவநிலை ஆக்சிஜன் கிடைத்துவந்தது. ஆனால், தற்போது ஒருநாள் விட்டு ஒருநாள் 5 டன் மட்டுமே அளிக் கின்றனர். கிடைக்கும் ஆக்சிஜன் மருத்துவமனைகளுக்கே பற்றாக் குறையாக உள்ளது. எனவே, அரசு உத்தரவுப்படி கடந்த 10 நாட்களாக தொழில் துறையினருக்கான ஆக்சிஜன் விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்தியுள்ளோம்.
தனியார் மருத்துவமனைகளில் இருந்து தினமும் காலையிலேயே அழைத்து, ‘ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டது. விநியோகம் செய்யுங்கள்’ என்கின்றனர். எங்களிடம் போதிய அளவு ஆக்சிஜனை விநியோகம் செய்வதற்கான கட்டமைப்பு வசதி, கிரையோஜெனிக் டேங்கர் லாரிகள் ஆகியவைஉள்ளன. ஆனால், உற்பத்தியாளர்க ளிடம் இருந்து எங்களுக்கு போதிய அளவு திரவ வடிவ ஆக்சிஜன் கிடைக்காததால் இருக்கும் கட்டமைப்பை முழுமையாக பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளோம். கிடைக்கும் திரவ நிலை ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்தும், மருத்துவமனை களுக்கு டேங்கர்கள் மூலமாகவும் நேரடியாக விநியோகம் செய்கிறோம்.
தினமும் 25 டன் தேவை
கேரள மாநிலம் கஞ்சிக்கோட்டில் உள்ள திரவ நிலை ஆக்சிஜன் உற்பத்தி ஆலையில் தினமும் சுமார் 180 டன் வரை உற்பத்தி செய்கின்றனர். அதில், கேரள மாநிலத்தின் தேவைக்காக 150 டன்களை எடுத்துக்கொள்கின்றனர். எஞ்சியுள்ளவற்றை பிரித்து கோவையில் உள்ள விநியோகஸ் தர்களுக்கு அளிக்கின்றனர். கோவைக்கு மட்டும் தினமும் 20 முதல் 25 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. எனவே, இந்த அளவை கேரள அரசிடம் தமிழக அரசு பேசி பெற்றுத்தந்தால் பிரச்சினை ஏற்படாது. தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்தால் மட்டுமே ஆக்சிஜன் தேவை குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்
கூடுதல் தேவை இருப்பதால், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை இங்கு எடுத்துவரலாம். இதற்கு தமிழக அரசு அனுமதி பெற்றுத்தர வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். அங்கிருந்து ஆக்சிஜன் எடுத்துவர வேண்டுமெனில், சென்றுவர 48 மணி நேரமாகும். ஆனால், கஞ்சிக்கோட்டிலேயே கிடைத்துவிட்டால் போக்குவரத்து எளிதாக இருக்கும். கர்நாடகாவில் இருந்து விரைவாக எடுத்துவர வேண்டுமெனில், ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயிலில் லாரியை ஏற்றி கொண்டுவரலாம் என ஆக்சிஜன் விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT