Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகளிர், குழந்தைகள் நலப் பிரிவுக்கான புதிய கட்டிடத்தை தற்காலிக கரோனா வார்டாக மாற்ற முடிவு: ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 250 படுக்கை வசதி

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்தில் ஆய்வு செய்கிறார் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி. உடன் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ஜீவா.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மகளிர் மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்கு கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை தற்காலிக கரோனா வார்டாக மாற்ற மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். இதில் ஆக்சிஜன் அளிக்கும் வசதியுடன்கூடுதலாக 250 படுக்கைகள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.18 கோடி செலவில் மகளிர்மற்றும் குழந்தைகள் நலப் பிரிவுக்குபயன்படுத்த புதிய கட்டிடம் கட்டப்பட்டது.தற்போது கரோனா அதிகம் பரவி வருவதால் நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கைகள் தேவைப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தப் புதிய கட்டிடத்தை கரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் இதனை விரைவில் திறக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக 13 பேர் உயிரிழந்தனர். இந்தச்சம்பவம் அருகாமையில் உள்ள மாவட்டங்களிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 250 படுக்கை வசதியுடன் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

புதிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள 250 படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதிசெய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம், தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. மக்கள் தொகை அதிகம் கொண்ட குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் பகுதிகளில் கூடுதல் முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருகின்றன.

பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்றவேண்டும், கைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அத்தியாவசிய பணிகள் தவிரமற்ற பணிகளுக்கு வீடுகளை விட்டு வெளியேவரக் கூடாது. வணிக வளாகங்கள், கடைகள்கரோனா தடுப்பு விதிகளை கண்டிப்பாகப்பின்பற்ற வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிப்படைந்தவர்கள் 3,025 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். இவர்களில் 1,558 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 613 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளன. இதுவரை 466 நபர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதம் 147 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 375 படுக்கைகள் உள்ளன. இதில் 250 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. தற்போது மேலும் 50 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் உள்ளது. தற்போது இதேஅளவு கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 3 தினங்களுக்கு ஒரு முறை ஆக்சிஜன் நிரப்பப்படுகிறது. தற்போது தேவை அதிகரித்து12ள்ளதால் தினமும் நிரப்பநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஆக்சிஜன் அளிக்க தேவையான கருவிகள் இருப்பு உள்ளன. கூடுதலாக தேவைப்பட்டால் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) ஜீவா, மருத்துவ அலுவலர்கள் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x