Published : 05 May 2021 09:38 PM
Last Updated : 05 May 2021 09:38 PM
கோவையில் கரோனா தடுப்பூசிக்குத் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுவதால் அரசு மருத்துவமனைகளுக்குத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயது முதல் 59 வயது வரையுள்ள, சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் போன்ற இணைநோய் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
இதில், கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 6-ல் இருந்து 8 வாரத்துக்குள் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி போட்டபின் 4-ல் இருந்து 6 வாரத்துக்குள் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
அண்மையில் தனியார் மருத்துவமனைகளுக்குத் தடுப்பூசி விநியோகம் நிறுத்தப்பட்டதால், அரசு மருத்தவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அங்கும் இருப்பு குறைவாக இருந்ததால் இரண்டாம் தவணை தடுப்பூசி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தற்போது அரசு மருத்துவமனைகளிலும் இருப்பு இல்லாத நிலை உள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவந்த தடுப்பூசி செலுத்தும் மையம், அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்துக்கு மாற்றப்பட்டு அங்கு கடந்த சில நாட்களாகத் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. அங்கு தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் இன்று (மே.5) தடுப்பூசி போடும் பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தடுப்பூசி முடிந்துவிட்டதாகக் கல்லூரி வாயிலில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டதால், பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அவர்களில் முதியோர் சிலர் கூறும்போது, “குறிப்பிட்ட காலத்துக்குள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என அரசு கூறுகிறது. ஆனால், அதற்கேற்ப கையிருப்பு இல்லை. எங்களுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி கிடைக்குமா என்ற அச்சத்தில் உள்ளோம். தடுப்பூசிகளை விரைந்து கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறும்போது, “இன்று மாலை நிலவரப்படி சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி இருப்பு ஏதும் இல்லை. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 790 தடுப்பூசிகள் மட்டுமே இருப்பில் உள்ளன. நாளை (மே 6) 13 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்து சேரும் என எதிர்பார்க்கிறோம். அவை வந்தவுடன் அரசு மருத்துவமனைகளுக்குப் பிரித்து அனுப்பி வைக்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT