Published : 05 May 2021 06:36 PM
Last Updated : 05 May 2021 06:36 PM
அஞ்செட்டி மலை கிராமத்தில் 5 வருடங்களாக மலைவாழ் மக்களை ஏமாற்றி வந்த இரண்டு போலி மருத்துவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவர் தலைமறைவானார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து (47). இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கோட்டையூர் மலை கிராமத்தில் வாடகை வீடு எடுத்துக் குடியேறியுள்ளார். மருத்துவப் படிப்பறிவு இல்லாத அங்கமுத்து, தன்னை மருத்துவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு வாடகை வீட்டின் ஓர் அறையில் கிளினிக் ஆரம்பித்து அப்பகுதி மக்களுக்கு சிகிச்சையளித்து வந்துள்ளார். சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கி, ஊசி போட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
அதேபோல கோட்டையூர் மலை கிராமத்தில் அருணாச்சலம் மெடிக்கல்ஸ் என்ற பெயரில் மருந்துக் கடை நடத்தி வந்த ஆனந்தன் என்பவரும் போலி மருத்துவராகச் செயல்பட்டு, அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்நிலையில் கோட்டையூரில் போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவது குறித்து அரசுக்கு ரகசியத் தகவல் கிடைக்கப் பெற்றது.
இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் உத்தரவின் பேரில், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஞானமீனாட்சி தலைமையிலான மருத்துவக் குழுவினர் மற்றும் போலீஸார் கோட்டையூர் கிராமத்துக்குச் சென்றனர். அங்கு போலி மருத்துவராகச் செயல்பட்டு வந்த ஆனந்தன் என்பவரைக் கைது செய்து அவரது மருந்துக் கடைக்கு சீல் வைத்தனர்.
போலி மருத்துவராகச் செயல்பட்டு வந்த மற்றொரு நபரான அங்கமுத்து தலைமறைவானார். இதுகுறித்து அஞ்செட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அங்கமுத்துவைத் தேடி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி ஆகிய மலையும் வனமும் சார்ந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களை ஏமாற்றி வரும் இதுபோன்ற போலி மருத்துவர்களைக் கண்டறிந்து கைது செய்யும் பணியில் தொடர்ந்து மாவட்ட சுகாதாரத் துறை ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT