Published : 05 May 2021 03:23 PM
Last Updated : 05 May 2021 03:23 PM
மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஓபிசி சமூகப் பிரிவனருக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரான இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என, திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று (மே 05) வெளியிட்ட அறிக்கை:
"மகாராஷ்டிர மாநில அரசால் மராத்தா வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 16% இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பு மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்திருப்பது மட்டுமின்றி, சமூக நீதிக்கு எதிராகவும் இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும் அமைந்துள்ளது.
எனவே, ஓபிசி பிரிவினருக்கு எதிரான இத்தீர்ப்பை எதிர்த்து, உடனடியாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
மராத்தா வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதற்குரிய தேவைகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, அந்த இட ஒதுக்கீட்டை அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என, உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக மட்டுமின்றி, மண்டல் வழக்கில் விதிக்கப்பட்ட 50 சதவீத உச்சவரம்பையும் மறு ஆய்வு செய்ய வேண்டுமா என்பது பற்றியும், அரசியலமைப்புச் சட்டத்தின் 102-வது திருத்தத்துக்குப் பிறகு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைத் தீர்மானிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதைப் பற்றியும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஆராய்ந்தது.
அத்துடன் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைத் (SEBC) தீர்மானிக்கும் அதிகாரம், மாநில அரசுகளுக்கு இருக்கிறதா என்பதைப் பற்றியும் ஆராய்ந்த நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின் 102ஆவது சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதற்குப் பிறகு, மத்திய அரசுக்கு மட்டுமே சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினரின் பட்டியலைத் தீர்மானிக்கும் அதிகாரம் இருக்கிறது என்றும், அதனைக் குடியரசுத் தலைவர் மட்டுமே செய்ய முடியும் என்றும், அதைச் செய்வதற்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.
அதாவது, மாநில அரசுகள் இந்தப் பட்டியலுக்கு சில ஆலோசனைகளை, பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும். அவர்களாகவே அந்தப் பட்டியலைத் தீர்மானிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதேவேளையில், இட ஒதுக்கீட்டின் அளவு, தன்மை ஆகியவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநிலங்களிடம் தொடரும் என்று ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்திரா சஹானி வழக்கில் நிர்ணயிக்கப்பட்ட 50 சதவீத உச்சவரம்பை மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவை இல்லையென்றும், அதை 11 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லலையென்றும் தீர்ப்பளித்துள்ளது. அதாவது, 50 சதவீத உச்சவரம்பு நீடிக்குமென்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலைத் தீர்மானிக்கும் அதிகாரம், மாநில அரசுகளுக்கு உள்ளது என்று மத்திய அரசின் வழக்கறிஞர் வாதாடியபோதும், அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. இது பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மாநில அரசுகளின் அதிகாரத்தை முற்றாக ஒழித்துக் கட்டிவிட்டது. ஏற்கெனவே அவ்வாறு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடுகள் கூட இப்பொழுது கேள்விக்குள்ளாகி இருக்கின்றன.
அதாவது, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல்களை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லையென ஆக்கியுள்ளது இத்தீர்ப்பு.
இந்தத் தீர்ப்பின் காரணமாக, சமூக நீதிக்கும், மாநில உரிமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்கும் திமுக அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அதிக எண்ணிக்கை கொண்ட நீதிபதிகளின் அமர்வுக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்".
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT