Last Updated : 05 May, 2021 01:08 PM

 

Published : 05 May 2021 01:08 PM
Last Updated : 05 May 2021 01:08 PM

தமிழகத்தில் இரவு நேர, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை ரத்து செய்யக்கோரி வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை: கோப்புப்படம்

மதுரை

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய மனு தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் கரோனா 2-ம் அலை பரவல் தீவிரமாக உள்ளது. கரோனா தொற்று ஒருவரின் உமிழ்நீரால் பரவுகிறது. கரோனா தொற்றால் நடுத்தர வயதுடையவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் உயிரிழப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க மக்கள் அதிகமாகக் கூடுவதற்குத் தடை விதிப்பது, அத்தியாவசியமற்ற பெரும் வணிக நிறுவனங்களைத் திறக்கத் தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதுமானது. இரவு நேர ஊரடங்கால் கரோனா கட்டுப்படுத்தப்படும் என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை.

எனவே, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை ரத்து செய்தும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், கோழி மற்றும் இறைச்சிக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கவும், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட இணைப்புச் சாலைகளில் டீக்கடை, ஹோட்டல், நான்கு சக்கர வாகனப் பழுது நீக்கும் கடைகள், பஞ்சர் கடைகளைத் திறக்கவும், இரவு நேரங்களில் 50 சதவீதப் பயணிகளுடன் பொதுப் போக்குவரத்தை அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி அமர்வில் இன்று (மே 5) விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில், பல்வேறு மாநிலங்களில் கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும், அங்கு பொதுப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x