Published : 05 May 2021 11:17 AM
Last Updated : 05 May 2021 11:17 AM
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து உரிமை கோரினார்.
சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 6 அன்று நடைபெற்றது. மே 2 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி 159 இடங்களைப் பெற்றது. திமுக 125 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சின்னத்தில் நின்றவர்கள் 8 பேர் வெற்றி பெற்றதன் மூலம் கூட்டு எண்ணிக்கை 133 ஆக உள்ளது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதியானது.
இந்நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று (மே 04) நடைபெற்றது. கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்ற மதிமுக கட்சியினர் 4 பேர், மனிதநேய மக்கள் கட்சியினர் இருவர், கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தவாக தலைவர் வேல்முருகன் ஆகிய 8 பேர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், முதல்வராகத் தேர்வு செய்யப்பட தகுதியான திமுக சட்டப்பேரவை தலைவராக ஸ்டாலின் முறைப்படி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இன்று (மே 05) காலை 10.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, திமுக எம்எல்ஏக்கள் 125 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற 8 பேர் என சேர்த்து 133 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தையும் அமைச்சரவை பட்டியலையும் மு.க.ஸ்டாலின் பன்வாரிலால் புரோஹித்திடம் வழங்கினார். இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஸ்டாலினை ஆட்சியமைக்க அழைப்பார்.
இதையடுத்து, ஆளுநர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "நேற்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களால் ஏகமனதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தீர்மானத்தை மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநரிடம் வழங்கினார். அப்போது, பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, நான் உள்ளிட்டோர் உடனிருந்தோம். மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவித்தார். மாலைக்குள் ஆளுநர் அழைப்பார். பதவியேற்கும் நேரம் உள்ளிட்டவற்றை ஆளுநரே முடிவெடுப்பார்" என தெரிவித்தார்.
வரும் 7-ம் தேதி ஆளுநர் மாளிகையில் எளிமையாக கரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி பதவியேற்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய அமைச்சரவையில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்களும், புதுமுகங்களும் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT