Last Updated : 11 Dec, 2015 04:23 PM

 

Published : 11 Dec 2015 04:23 PM
Last Updated : 11 Dec 2015 04:23 PM

பிசான நெல் சாகுபடி பணிகள் தீவிரம்: 15 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி செய்ய வாய்ப்பு

அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பியதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பிசான நெல் சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பிசான நெல் சாகுபடி செய்யப்படும் என, வேளாண்மை துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை தாமிரபரணி பாசன பகுதிகளில்தான் அதிக அளவில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தாமிரபரணி பாசனத்தைச் சார்ந்து 46,107 ஏக்கர் (18,659 ஹெக்டேர்) நன்செய் நிலங்கள் உள்ளன. இதில் பெரும் பகுதி நெல்லும், சிறிய அளவில் வாழை உள்ளிட்ட இதர பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே போதுமான மழை இல்லாத காரணத்தால் விவசாயம் நலிவடைந்து வருகிறது. முப்போகம் உரிமை பெற்ற நிலங்களில் ஒரு போகம் நெல் விளைந்தாலே போதும் என்ற நிலை இருந்து வருகிறது. கடந்த ஆண்டு ஓரளவுக்கு சாகுபடி நடைபெற்றது.

சாகுபடி தீவிரம்

நடப்பாண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. மேலும், தாமிரபரணி பாசனத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 53 குளங்களும் முழு அளவில் நிரம்பியுள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக பெய்த தொடர் மழை காரணமாக பிசான நெல் நடவு பணிகள் தாமதமாக தொடங்கியுள்ளன. தற்போது மழை குறைந்துள்ளதால் வைகுண்டம், திருச்செந்தூர், கருங்குளம், தூத்துக்குடி வட்டாரங்களில் நெல் நடவு பணிகள் தீவிரமடைந்துள்ளன.

17,500 ஹெக்டேர் இலக்கு

இது குறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வி.ஜெயக்குமார் கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு மொத்தம் 17,500 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் கார் பருவத்தில் 3,900 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி முடிவடைந்துள்ளது.

மீதமுள்ள 13,600 ஹெக்டேர் பரப்பில் பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு அணைகள், குளங்கள் அனைத்தும் முழுமையாக நிரம்பியிருப்பதால் இந்த இலக்கை தாண்டி சாகுபடி இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

15 ஆயிரம் ஹெக்டேரில் பிசானம்

இந்த ஆண்டு மானாவாரி குளங்களும் நிரம்பியுள்ளன. இதனால் தாமிரபரணி பாசனத்தைத் தவிர கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளிலும் நெல் நடவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதியில் சுமார் 1,500 ஹெக்டேரில் நெல் நடவு செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.

எனவே, இந்த ஆண்டு பிசான சாகுபடி இலக்கான 13,600 ஹெக்டேரை தாண்டி 15 ஆயிரம் ஹெக்டேர் வரை இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

தற்போது மாவட்டத்தில் நெல் நடவு பணிகள் 30 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் 70 சதவீதம் நடவு பணிகள் முடிந்துவிடும். திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள பகுதிகளில் மட்டும் சற்று தாமதமாகும்.

அம்பை- 16 ரகம்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் 50 சதவீதம் பேர் அம்பை- 16 ரகத்தையே பயிரிட்டுள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் கர்நாடகா பொன்னி, ஆடுதுறை 36, 42, 45 உள்ளிட்ட ரகங்களை பயிரிடுகின்றனர்.

விவசாயிகளுக்கு தேவையான உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் அனைத்தும் போதுமான அளவில் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாவட்டத்தில் பிசான நெல் சாகுபடி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x