Last Updated : 05 May, 2021 03:14 AM

7  

Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

குமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் விஜய் வசந்த் வெற்றிக்கு கைகொடுத்த 4 சட்டப்பேரவை தொகுதி வாக்குகள்

விஜய் வசந்த்

நாகர்கோவில்

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் கடும் போட்டிக்கு மத்தியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றுள்ளார். குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதியில் கூடுதலாக கிடைத்த வாக்குகள் அவரது வெற்றிக்கு கைகொடுத்துள்ளது.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோர் இடையே பலத்த போட்டி நிலவியது. 1,37,950 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் வசந்த் பெற்றி பெற்றார். ஆனால் கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணிக்குகிடைத்த வாக்குகளை இந்தமுறை பெறமுடியவில்லையே என்ற ஆதங்கம் காங்கிரஸ் கட்சியினரிடையே உள்ளது.

கன்னியாகுமரி, நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதிகளில் பொன் ராதாகிருஷ்ணனை விட விஜய் வசந்த் குறைவான வாக்குகளே பெற்றிருக்கிறார். கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் 1,04,769 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் விஜய் வசந்துக்கு 1,02,337 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இதுபோல் நாகர்கோவில் தொகுதியில் பாஜக 87,427 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் காங்கிரசுக்கு 81,497 வாக்குகளே கிடைத்துள்ளன.

கைகொடுத்த 4 தொகுதிகள்

அதே நேரம் குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய4 தொகுதிகளில் விஜய் வசந்துக்கு கிடைத்த கூடுதல் வாக்குகள் பாஜகவை பின்னுக்குத் தள்ளியது.

குளச்சல் தொகுதியி்ல் விஜய் வசந்துக்கு 95,873 வாக்குகளும், பத்மநாபபுரம் தொகுதியில் 94,802 வாக்குகளும், விளவங்கோடு தொகுதியில் 93,193 வாக்குகளும், கிள்ளியூர் தொகுதியில் 99,578 வாக்குகளும் கிடைத்துள்ளன.

பொன் ராதாகிருஷ்ணன் குளச்சல் தொகுதியில் 67,445 வாக்குகளும், பத்மநாப புரம் தொகுதியில் 62,694 வாக்குகளும், விளவங்கோடு தொகுதியில் 60,092 வாக்குகளும், கிள்ளியூர் தொகுதியில் 50,479 வாக்குகளும் பெற்றுள்ளார்.

நாகர்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் பாஜகவும், கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதற்கேற்ப இவ்விரு தொகுதிகளிலும் பாஜகவுக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளன.

பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ்- திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதற்கேற்ப கூடுதல் வாக்குகள் இந்த 4 தொகுதிகளிலும் விஜய் வசந்துக்கு கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

தபால் வாக்குகளை பொறுத்தவரை விஜய் வசந்துக்கு 8,757 வாக்குகளும், பொன் ராதாகிருஷ்ணனுக்கு 5,181, வாக்குகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம் மொத்தம் 5,76,037 வாக்குகளை காங்கிரசும், 4,38,087 வாக்குகளை பாஜகவும், பெற்றுள்ளன.

கடந்த தேர்தல் நிலவரம்

ஆனால், 2019-ல் நடந்த மக்களவை தேர்தலில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் அதிக வாக்குகள் பெற்றிருந்தார். கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் 1,10,996 வாக்குகளும், நாகர்கோவிலில் 84,924, குளச்சலில் 1,06,850, பத்மநாபபுரத்தில் 1,02,120, விளவங்கோட்டில் 1,06,044, கிள்ளியூர் தொகுதியில் 1,12,950 வாக்குகளும் பெற்றிருந்தார்.

அதுபோல், கடந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் 82,296 வாக்குகளும், நாகர்கோவிலில் 74,500, குளச்சலில் 60,072, பத்மநாபபுரத்தில் 51,989, விளவங்கோட்டில் 52,289, கிள்ளியூர் தொகுதியில் 42,230 வாக்குகளும் பெற்றிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x