Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 4 தொகுதிகளில் நோட்டா வாக்குகளுடன் போட்டியிட்ட அமமுக

கோப்புப்படம்

வேலூர்

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடந்து முடிந்த 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கான தேர்தலில் 4 தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் நோட்டா வுக்கும் கீழ் வாக்குகளை பெற்றி ருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் என ஐந்துமுனை போட்டியாக பிரச்சாரம் களை கட்டியது. ஆனால், தேர்தல் களத் தில் திமுக, அதிமுக இடையே நேரடி போட்டி இருந்தாலும் சில இடங்களில் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பலத்த போட்டியை உருவாக்கினர்.

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தேர்தலில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுகவினர் எவ்வளவு வாக்கு களை தொகுதி வாரியாக வாங்குவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இதில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கடந்த தேர்தலைக் காட்டிலும் கூடுதல் வாக்குகளை பெற்று பலம் பெற்றுள்ளனர். அதேநேரம், அமமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் அக்கட்சியினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகள், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 4 தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் நோட்டாவுடன் போட்டியிட்டுள்ளனர்.

வேலூர் தொகுதியில் போட்டியிட்ட வி.டி.தர்மலிங்கம் நோட்டாவுக்கு விழுந்த 1,441 வாக்குகளை விட குறைவாக 865 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். காட்பாடி தொகுதியில் நோட்டாவுக்கு 1,889 வாக்குகள் கிடைத்த நிலையில் அமமுக வேட்பாளர் ஏ.எஸ்.ராஜா 1,066 வாக்குகள் மட்டும் பெற்றுள்ளார். அணைக்கட்டு தொகுதியில் நோட்டாவுக்கு 1,791 வாக்குகள் கிடைத்த நிலையில் அமமுக வேட்பாளர் சதீஷ்குமார் 1,140 வாக்குகள் பெற்றுள்ளார். குடியாத்தம் தனி தொகுதியில் நோட்டாவுக்கு 1,699 வாக்குகள் கிடைத்த நிலையில் அங்கு போட்டியிட்ட முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் ஜெயந்தி பத்மநாபன் 1,810 வாக்குகள் பெற்று ஆறுதல் பெற்றுள்ளார்.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை தொகுதியில் நோட்டாவுக்கு 1,652 வாக்குகள் கிடைத்த நிலையில் அங்கு போட்டியிட்ட அமமுக வேட்பாளர் வீரமணிக்கு 637 வாக்குகள் மட்டுமே கிடைத் துள்ளது. அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக கே.வி.குப்பம் தொகுதியில் போட்டியிட்டது. அங்கு நோட்டா வாங்கிய 1,798 வாக்குகளுக்கும் குறைவாகவே தேமுதிக வேட்பாளர் தனசீலன் 1,432 வாக்குகள் மட்டும் பெற்றுள்ளார்.

இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் சோளிங்கர் தொகுதியில் அமமுக வேட் பாளராக போட்டியிட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் என்.ஜி.பார்த்தீபன், 12 ஆயிரத்து 979 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்துள்ளார். இந்த தொகுதியில் நோட்டாவுக்கு 1,239 வாக்குகள் மட்டும் கிடைத்துள்ளது.

அதேபோல், அரக்கோணம் தொகுதியில் நோட்டாவுக்கு 1,656 வாக்குகள் கிடைத்த நிலையில் அங்கு போட்டியிட்ட அமமுக வேட்பாளர் கோ.சி.மணிவண்ணன் 4,777 வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x