Published : 04 May 2021 05:27 PM
Last Updated : 04 May 2021 05:27 PM
2.75 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இன்று தமிழகத்துக்கு வந்துள்ளன. இதுவரை 71 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
தடுப்பூசி போடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டாததால் தடுப்பூசிகள் வீணாயின. நேற்றைய நிலவரப்படி அகில இந்திய அளவில் தடுப்பூசியை வீணடிப்பதில் தமிழகமே முதலிடம். தமிழகத்தில் 8% தடுப்பூசிகள் வீணாவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. போதிய விழிப்புணர்வின்மை, மக்களுக்கு இருக்கும் பயம்தான் இதற்குக் காரணம்.
இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடச் சென்றவர்களுக்குத் தடுப்பூசி பற்றாக்குறை எனும் நிலை உருவானது. குறிப்பாக கோவாக்சின் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது முன்பதிவுடன் வருபவர்களுக்கு மட்டுமே கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது. சென்னையிலும் கோவாக்சின் தட்டுப்பாடு நிலவுகிறது.
சமீபத்தில் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தன. இரண்டு நாட்களுக்கு முன் 2 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன. பின்னர் ஏப்ரல் 28 அன்று 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தன. இவை மாவட்ட வாரியாகப் பிரித்து அளிக்கப்பட்டன. தமிழகத்துக்கு இதுவரை மொத்தமாக 68 லட்சத்து 25 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இரண்டாம் டோஸ் போடுபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. தற்போது தடுப்பூசி பற்றாக்குறையை நீக்கவும், மே 1 முதல் தொடங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடும் நடைமுறைக்காக கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என்பதற்காகவும் 1.5 கோடி டோஸ் தடுப்பூசிகள் வாங்க ஆர்டர் கொடுத்தது. ஆனால் ஆர்டருக்கு எப்போது சப்ளை என்று கூறப்படாததால், மே 1 முதல் போடப்படுவதாக இருந்த 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2.75 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் இன்று தமிழகத்துக்கு வந்துள்ளன.
பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் இதுகுறித்து இன்று கூறுகையில், ''ஹைதராபாத்திலிருந்து 75 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளும், மும்பையிலிருந்து 2 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் இன்று தமிழகத்துக்கு வந்துள்ளன. இவற்றைச் சேர்த்து மொத்தம் 71 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன.
தமிழகத்துக்கு இதுவரை 71 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன. 60 லட்சம் டோஸ் வரை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும் 7.8 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கின்றன.
கோவாக்சின் தடுப்பூசி தற்போது தட்டுப்பாடின்றிப் போடப்படுகிறது. கோவாக்சின் தடுப்பூசி கிடைத்தவுடன் முதலாவது டோஸ் உடனடியாகப் போடப்படும்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT