Last Updated : 21 Dec, 2015 08:57 AM

 

Published : 21 Dec 2015 08:57 AM
Last Updated : 21 Dec 2015 08:57 AM

வடிந்திருக்கும் வெள்ள நீரும், வடியாது பெருகும் மனிதநேயமும்..

யாரும் எதிர்பார்த்திரா வண்ணம் பெருமழை கொட்டித் தீர்த் தது. இந்த மழை வெள்ளப் பெருக்கினால் சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங் களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இருப்பிடம், உடைமைகள் என அனைத்தையும் வெள்ளம் கொண்டுபோக, கையறு நிலையில் நின்ற மக்களிடம், ‘நாங்கள் உங்களோடு இருக்கிறோம்; நீங்களும் எங்களின் அன்பான உறவுகளே…’ என்று தமிழகம் முழுவதுமிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், உலகின் பல திசைகளில் இருந்தும் ஏராளமான ஈர இதயங்கள் தங்களாலான உதவிகளை அனுப்பிவைத்தது காலத்தால் என்றும் மறையாத நெகிழ்வான காட்சிகள்.

இந்நிலையில்தான், ‘தி இந்து’ மழைவெள்ள நிவாரணப் பொருட்களைப் பாதிக்கப்பட்ட மக்களின் கைகளில் முறையாக கொண்டு சேர்க்கும் முயற்சியில் ‘மீண்டு எழுகிறது சென்னை’ எனும் நம்பிக்கைக் குரலோடு ஒருங்கிணைக்க முன்வந்தது. ‘தி இந்து - நிவாரண முகாமுக்கு’ வந்து குவிந்தவை வெறும் பொருட்களல்ல, அவை அனைத்தும் மக்களின் அன்புக் குவியல்கள். அதேபோல், நிவாரணப் பொருட்களை உரிய மக்களின் வீடுகளுக்கே சென்று சேர்க்க, நாள்தோறும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் வந்து சேர்ந்தார் கள்.

ஈரமிக்க மனிதர்களின் கனிவு கலந்த உதவிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை முற்றாய் துடைக்க முடியாது என்றாலும், அவர்களது பெருந்துயரில் இருந்து சற்றே விடுபட்டு, தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இந்த உதவிகள் பெருமளவில் கைகொடுத்தன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

பாதிப்பில் இருந்து மீள வழியின்றி நிற்கிற, சமூகத்தால் மிகவும் பின்தங்கிய மக்களை, இன்னும் நிவாரண உதவிகள் சென்றடைய வேண்டிய மக்களை, தேடிச் சென்று அவர்களின் இருப்பிடத்திலேயே உதவிகளை வழங்கியதே ‘தி இந்து’ நிவாரண முகாமின் சிறப்பான பணியாகும்.

விடாது தொடரும் உதவி…

’போதும்… நிவாரணப் பொருட்கள்!’ என்று சொன்னாலும், “நீங்கள்தான் சரியான மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள். இதோ… எனது பங்களிப்பு” என்று சென்னை அடையாறைச் சேர்ந்த அய்யனார், 100 போர்வைகள் உள்ளிட்ட பல்வேறு உடைகளை ‘தி இந்து’ நிவாரண முகாமுக்கே நேரடியாக கொண்டு வந்து சேர்த்தார்.

கடைக்கோடி மக்களை நோக்கி…

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகேயுள்ள கொசவன்பேட்டையில் வசிக்கும் 63 இருளர் குடும்பங்களும் இந்த மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மக்களுக்கு உதவிடும் நோக்கில், கடந்த ஓராண்டாக இருளர் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிற ‘சாய்பிரியா பந்துத்வா’ அறக்கட்டளையோடு ‘தி இந்து’வும் இணைந்து போர்வை, வேட்டி, புடவை, லுங்கி உள்ளிட்ட துணிகள் மற்றும் அரிசி, பருப்பு, புளி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண உதவிகளை அனைத்து குடும்பங்களுக்கும் கொண்டு சேர்த்தது. சாய்பிரியா பந்துத்வா அறக்கட்டளை யின் நிறுவனர் உமா தயாநிதி, துரை ராமகிருஷ்ணன், சாந்தா ரமணன், ஆனந்த், முகேஷ் ராமகிருஷ்ணன், பத்மினி முகேஷ் ஆகியோர் உடனிருந்து நிவாரணப் பொருட்களை வழங்கினர்.

அதேபோல், நந்தியம்பாக்கம் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த சுமார் 176 குடும்பங்களுக்கு உடைகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகேயுள்ள குமிழியில் வசிக்கும் சுமார் 400 குடும்பங்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

யாருமற்றவர்கள் என்று யாருமில்லை…

திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ஜாம்பஜார் ஆகிய பகுதிகளில் நடைபாதைகளில் வசிக்கும் மக்களில் சுமார் ஆயிரம் பேருக்கு போர்வை, புடவை, லுங்கி, துண்டு, கொசுவர்த்திச் சுருள் போன்ற நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில், ஏராளமான திருநங்கைகளும் நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொண்டனர்.

மழைவெள்ளம் வடிந்திருக்கலாம்; ஆனால், இன்னமும் நிற்காமல் பெருகிக் கொண்டே இருக்கிறது மனிதர்களின் வற்றாத மனிதநேயம்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கொசவன்பேட்டையில் ‘தி இந்து’, ‘சாய்பிரியா பந்துத்வா’ அறக்கட்டளை சார்பில் இருளர் மக்களிடம் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x