Published : 03 May 2021 09:59 PM
Last Updated : 03 May 2021 09:59 PM
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவைச் சேர்ந்தவர்கள் தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைய உள்ளனர்.
முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி காலம் முதல், திமுகவின் கோட்டையாக கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதி திகழ்கிறது. இது திமுகவின் ஆதிக்கம் அதிகம் உள்ள தொகுதி. 1996-ல் போட்டியிட்டு திமுக வெற்றி கண்டது. பெ.சு.திருவேங்கடம் 4 முறை வெற்றி பெற்றார். பின்னர், 2001இல் நடைபெற்ற தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது. அதன்பிறகு, நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும், உட்கட்சிப் பூசலால், கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக விட்டுக்கொடுத்தது.
தந்தைக்குப் பிறகு மகன்
இந்தத் தொகுதியைக் கூட்டணிக் கட்சிக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கை வலுத்தது. அதன் எதிரொலியாக, கலசப்பாக்கம் தொகுதியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக போட்டியிட்டது. இதில் 9,222 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி வாகை சூடியது.
4 முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பெ.சு.திருவேங்கடத்தின் மகன் சரவணன், முதன்முறையாக வெற்றி பெற்றுள்ளார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தையைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைக்குள் திமுக சார்பில் சரவணன் நுழைகிறார்.
உதயசூரியன் உதித்தது
செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் செல்வாக்கு பெற்றிருந்த திமுக, 1996இல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. பின்னர், 2001இல் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியைக் கண்டது. அதன்பிறகு, 3 முறை கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது. இதனால் திமுகவினர் அதிருப்தி அடைந்திருந்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் நடத்திய காணொலிக் கலந்தாய்வுக் கூட்டத்தில், செய்யாறு தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும், உதயசூரியன் உதிக்க வேண்டும் என நேரடியாக வலியுறுத்தினர்.
இதன் எதிரொலியாக, செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக போட்டியிட்டது. வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் அதிமுக முன்னிலை பெற்று வந்தாலும், 14 சுற்றில் இருந்து திமுகவின் ஆதிக்கம் தொடங்கியது. இறுதியாக, 12 ஆயிரத்து 271 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.
இதன் மூலம், செய்யாறு தொகுதியில் இருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, திமுகவைச் சேர்ந்த ஜோதி, தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT