Published : 03 May 2021 07:26 PM
Last Updated : 03 May 2021 07:26 PM
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனைவிட 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்று கோவையின் முதல் பாஜக எம்எல்ஏ என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.
கோவை தெற்குத் தொகுதியில் 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் 33,113 வாக்குகளைப் பெற்று டெபாசிட்டைத் தக்கவைத்தார்.
அதைத் தொடர்ந்து, 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜக, கோவை தெற்குத் தொகுதியைக் கேட்டுப் பெற்றது. வானதி சீனிவாசனுக்கு கோவை தெற்குத் தொகுதி ஒதுக்கப்பட்டதால், அங்கு எம்எல்ஏவாக இருந்த அம்மன் கே.அர்ச்சுணனுக்கு கோவை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதற்கு, ஆரம்பத்தில் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே கோவை வந்து கொடிசியாவில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் பிரதமர் மோடி. பின்னர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் வானதி சீனிவாசனை ஆதரித்து நேரடியாகப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
கோவை தெற்கில் பாஜக, மநீம, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியதால் ஆரம்பம் முதலே இந்த தொகுதி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. கோவையில் பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் 1998, 1999 என இரு முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால், எம்எல்ஏக்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.
இருப்பினும், இந்தத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு உள்ள வலிமையான வாக்கு வங்கியுடன், கோவையில் தங்களுக்கு சொந்த செல்வாக்கும் இருப்பதை பாஜகவினர் கூடுதல் பலமாகக் கருதினர். அதை மெய்ப்பிக்கும் விதமாக தேர்தல் முடிவும் அமைந்தது.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனைவிட 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்று கோவையின் முதல் பாஜக எம்எல்ஏ என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.
கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று (மே.3) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் கூறும்போது, "ஆக்கபூர்வமான வகையில் எந்தெந்த வகையில் எல்லாம் மத்திய அரசின் உதவியைப் பெற முடியுமோ, அந்த வகையில் மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றுவோம். மக்களுக்கு உதவி செய்வதைத்தான் இந்த நேரத்தில் வெற்றிக் கொண்டாட்டமாகப் பார்க்கிறோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT