Last Updated : 03 May, 2021 07:19 PM

 

Published : 03 May 2021 07:19 PM
Last Updated : 03 May 2021 07:19 PM

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த நகராட்சி சார்பில் நோய்த்தடுப்புப் பணிகள் தீவிரம்

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட நகராட்சி தூய்மைப் பணியாளர்கள்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த நோய்த் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 7 பேர், மே 1-ம் தேதி ஒரே நாளில் உயிரிழந்தனர். நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன.

நகர்ப்புறங்களைத் தொடர்ந்து, தற்போது கிராமப் பகுதிகளிலும் கரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. குறிப்பாக, கந்திலி, ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, மாதனூர் ஒன்றியப் பகுதிகளில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

நோய்ப் பெருக்கம் அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனைகள், சிறப்பு சிகிச்சை மையங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. நோய்த் தொற்றில் இருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்த முன்வந்துள்ளனர். ஆனால், போதுமான அளவுக்குத் தடுப்பூசி இல்லாததால் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த தடுப்பூசி முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

45 வயதைக் கடந்த 85 சதவீதம் பேருக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில், முதல் டோஸ் போட்டவர்களுக்கே 2-வது டோஸ் போடத் தடுப்பூசி கையிருப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினந்தோறும் தடுப்பூசி போட வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றி வந்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கரோனா நோய்த் தடுப்புப் பணிக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இருந்தாலும், ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றாம்பள்ளி போன்ற இடங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், தங்களுக்கான சிகிச்சை முழுமையாக அளிக்கப்படவில்லை என, கரோனா நோயாளிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதே நேரத்தில், கரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு அதற்கான முடிவை வழங்கவும் தாமதம் ஏற்படுவதால், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாமல் தவிப்பதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 208 குழுக்களை அமைத்து, மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கடந்த வாரம் உத்தரவிட்டார்.

அதேபோல, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் மாவட்டம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியப் பகுதிகளில், கரோனா நோய்த் தடுப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவிட்டார். அதன்படி, திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நேற்று (மே 2) கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் தொடங்கின.

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் 'மாஸ் கிளீனிங்' நேற்று நடைபெற்றது. நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 200 பேர் 36 வார்டுகளில் கிருமி நாசினி தெளித்து, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தூவினர். நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் ஆங்காங்கே சிதறிக்கிடந்த குப்பைக் கழிவுகளை அகற்றி, தெருக்கால்வாய்களைத் தூர்வாரி மருந்து தெளித்தனர்.

இதுகுறித்து, நகராட்சி துப்புரவு ஆய்வாளர் குமார் கூறும்போது, "மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் உத்தரவு பேரில், நகராட்சி முழுவதும் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 19 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் லைசால் கலந்து, அனைத்துப் பகுதிகளிலும் தெளித்து வருகிறோம். அதேபோல, 30 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் சோடியம் ஹைபோ குளோரைடு கலந்து அதையும் நகராட்சிப் பகுதிகளில் தெளித்துள்ளோம். இது தவிர, பேருந்து நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட் பகுதி, உழவர் சந்தை, வாரச்சந்தை, காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு கலந்து தூவியுள்ளோம்.

அடுத்த வாரத்தில் நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதியில் உள்ள வீட்டுக்குள் சென்று கிருமி நாசினி தெளிக்கவும், அங்குள்ள கால்வாய்களைத் தூய்மைப்படுத்தி, மருந்துகளை அடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.

இதேபோல, மாவட்டம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய நிர்வாகத்தில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x