Last Updated : 03 May, 2021 05:42 PM

4  

Published : 03 May 2021 05:42 PM
Last Updated : 03 May 2021 05:42 PM

ஆட்சி மாற்றம்  எதிரொலி: உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 4 பேர் ராஜினாமா

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வளாகம்: கோப்புப் படம்.

மதுரை

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்க உள்ள நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ராஜினாமா செய்யத் தயாராகி வருகின்றனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் உட்பட 4 அரசு வழக்கறிஞர்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைமை அரசு வழக்கறிஞர், தலைமை குற்றவியல் அரசு வழக்கறிஞர், தலைமை உரிமையியல் வழக்கறிஞர், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், அரசு குற்றவியல் வழக்கறிஞர்கள், அரசு உரிமையியல் வழக்கறிஞர்கள் என 233 அரசு வழக்கறிஞர்கள் பணியிடங்கள் உள்ளன.

இதில், 79 அரசு வழக்கறிஞர்களின் பணியிடங்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் உள்ளன. தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்துக்கு என, தனி விதிகள் உள்ளன. இருப்பினும், ஆட்சியில் இருக்கும் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்களே அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் அதிமுக வழக்கறிஞர்கள் அணியைச் சேர்ந்தவர்களே அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டனர். 2011 அதிமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட பலர், 2016 அதிமுக ஆட்சியிலும் தொடர்ந்தனர்.

இதையடுத்து, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டனர்.

ராஜினாமா

இந்நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, அதிமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்டவர்கள் ராஜினாமா செய்யத் தயாராகி வருகின்றனர். அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் நேற்று (மே 02) ராஜினாமா செய்தார்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருப்பவர் கே.செல்லப்பாண்டியன். இவர் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சம்பந்தி ஆவார். இவர் நேற்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்தார்.

கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் கன்னித்தேவன், எஸ்.சந்திரசேகர், தினேஷ்பாபு, ஆனந்தராஜ் ஆகியோர் இன்று (மே 03) ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு வழக்கறிஞர்களாக இருப்பவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்யத் தயாராகி வருகின்றனர். தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு மே 7-ல் பொறுப்பேற்க உள்ளது. அதற்குள் ராஜினாமா கடிதத்தை வழங்க தற்போதைய அரசு வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

தயாராகும் திமுக வழக்கறிஞர்கள்

அரசு வழக்கறிஞர்கள் பதவியை அதிமுக வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்யும் நிலையில், அந்த இடத்தைப் பிடிக்க திமுக வழக்கறிஞர்கள் இப்போதே களத்தில் குதித்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலில் தீவிர சட்ட உதவிகள் வழங்கிய, நீதிமன்றங்களில் திமுக வழக்குகளுக்காக பிரதிபலன் பாராமல் உழைத்த திமுக வழக்கறிஞர்கள் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x