Published : 03 May 2021 04:56 PM
Last Updated : 03 May 2021 04:56 PM
புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதல் சட்டப்பேரவை உறுப்பினராக எம்.சின்னதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்கள், தொழிற்சங்கத்தினர் என வலிமையோடு இருந்தாலும், இம்மாவட்டத்தில் அக்கட்சியில் இருந்து இதுவரை யாரும் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றதில்லை.
இந்நிலையில், இம்முறை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கந்தர்வக்கோட்டை தனித் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கட்சியின் மாநிலக் குழுவுக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமையிலான மாவட்டக் குழு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இருந்தது. இதைப் பரிசீலித்த மாநிலக் குழு, திமுக தலைமையிடம் வலியுறுத்தி தொகுதியை ஒதுக்கிப் பெற்றது.
பிறகு, கட்சியின் வேட்பாளராக மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை அறிவிக்கப்பட்டு போட்டியிட்டார். இவரை எதிர்த்து, அதிமுக வேட்பாளராக தீத்தான்விடுதி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த ஜெயபாரதி உட்பட 14 பேர் போட்டியிட்டனர்.
அதிமுக உட்பட மற்ற வேட்பாளர்களுக்குப் பெரிய அளவில் விஐபிகளின் பிரச்சாரம் இல்லாவிட்டாலும் சின்னதுரையை ஆதரித்து விஐபிகள் இல்லாத நாளே இல்லை எனும் அளவுக்குப் பிரச்சாரக் களம் இருந்தது.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர், சங்கங்களைச் சேர்ந்தோரும் தொகுதியில் தங்கி இருந்து திமுக தலைமையில் பணிபுரிந்தனர்.
இதன் விளைவாக, அதிமுக வேட்பாளரைவிட 12 ஆயிரத்து 721 வாக்குகள் அதிகம் பெற்று சின்னதுரை வெற்றி பெற்றார். இதன் மூலம், மாவட்டத்தின் முதல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ எனும் கணக்கை சின்னதுரை தொடங்கி இருக்கிறார்.
சின்னதுரையின் மனைவி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர். தனது சிறிய அளவிலான ஓட்டுவிட்டைத் தவிர வேறு எந்தச் சொத்தும் இல்லை என, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த, எளிய குடும்பத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ள சின்னதுரையைப் பல்வேறு கட்சியினர், தொழிலாளர்கள், கிராம மக்கள் திரண்டு இன்று (மே 03) நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment