Published : 03 May 2021 01:35 PM
Last Updated : 03 May 2021 01:35 PM
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக வசமிருந்த காரைக்கால் தெற்கு தொகுதியில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
நடந்து முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று (மே 2) வெளியானது. இத்தேர்தலில் காரைக்கால் மாவட்டம், காரைக்கால் தெற்கு தொகுதியில், அதிமுக சார்பில் அத்தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த கே.ஏ.யு.அசனா, திமுக சார்பில் அக்கட்சியின் காரைக்கால் அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் போட்டியிட்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான தொகுதிகளுள் இதுவும் ஒன்று. 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், இதே தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.ஏ.யு.அசனாவிடம் வெறும் 20 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நாஜிம், இம்முறை 12,034 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுள், என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆறுமுகம் ( இந்திரா நகர்) 18,531 வாக்குகள் வித்தியாசத்திலும், கே.எஸ்.பி.ரமேஷ் (கதிர்காமம்) 12,246 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். அதற்கடுத்த நிலையில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காரைக்கால் தெற்கு தொகுதியில் நாஜிம் வெற்றி பெற்றுள்ளார்.
நாஜிம் பெற்ற மொத்த வாக்குகள் 17,401. அசனா பெற்ற மொத்த வாக்குகள் 5,367.
அதிமுக, பாஜகவினர் உள்ளிட்டோர் திமுக வேட்பாளருக்கு எதிராக மிகத் தீவிரமாகக் களப்பணியாற்றிய நிலையில், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது ஆளுமையைப் பதிவு செய்துள்ளார்.
ஒரு முறை நியமன சட்டப்பேரவை உறுப்பினராகவும், 5 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினராகவும் நாஜிம் இருந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT