Published : 03 May 2021 01:27 PM
Last Updated : 03 May 2021 01:27 PM
மதிமுகவுக்கு 4 தொகுதிகளில் வெற்றி திமுகவால் கிடைத்தது என, வைகோ தெரிவித்தார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 159 இடங்களைக் கைப்பற்றி திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்றது. இதன் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார். வரும் 7ஆம் தேதி அவர் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். அதிமுக ஆட்சியை இழந்தாலும் 65 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் எதிர்க்கட்சியாக அமருகிறது.
இந்நிலையில், முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று (மே 03) ஒவ்வொருவராகச் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ, மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து வைகோ பேசுகையில், "இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களின் முதல்வர்களெல்லாம் இனி தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ்நாட்டின் முதல்வர் தலைமையிலேயே இயங்கக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகியிருக்கின்றது.
மு.க.ஸ்டாலினின் கவனம் முழுவதும் கரோனா தொற்று குறித்துதான் இருக்கிறது என்பதை அவருடன் பேசியதிலிருந்து அறிந்தேன். முந்தைய அரசு தோற்கப் போகிறோம் என்பதால், கடந்த இரண்டு மாத காலமாக அலட்சியமாகவே இருந்தது.
கரோனா தொற்றிலிருந்து மக்களைக் காப்பது குறித்துத்தான் என் முழு கவனமும் இருக்கிறது என ஸ்டாலின் கூறினார். அந்தச் சவாலைச் சந்திப்பார். அதில் வெற்றியும் அடைவார். தமிழகத்தையும் பாதுகாப்பார்.
மக்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய துன்பத்தை அகற்றுவது எப்படி என்பது குறித்துதான் அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். தமிழகத்துக்கு இது ஒரு பொற்காலம். மதிமுகவுக்கு 4 தொகுதிகளில் கிடைத்த வெற்றி திமுகவால் ஏற்பட்ட வெற்றி" என்று வைகோ தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT