Published : 03 May 2021 11:56 AM
Last Updated : 03 May 2021 11:56 AM

‘‘20 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவையில் பாஜக: சபதம் ஏற்றோம்; நிறைவேறி இருக்கிறது’’- எல்.முருகன் மகிழ்ச்சி

சென்னை 

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம், தமிழக மக்களுக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் சட்டப்பேரவையில் பாஜகவின் குரல் ஒலிக்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம். தேர்தல் மூலம் கிடைக்கும் வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் பாஜக மக்களுக்காக உழைப்பதில் என்றும் பின் வாங்கியதில்லை பாஜக அரசியல் கட்சி மட்டுமல்ல மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் சேவை செய்கிற அமைப்பும் ஆகும்.

நான் மாநிலத்தலைவராக பொறுப்பேற்ற போது தெரிவித்த கருத்துக்களை மீண்டும் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். தமிழகத்தில் தாமரை மலராது என்று சொல்லி கொண்டு இருந்தவர்கள் மத்தியில் 2021ல் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டப்பேரவையை அலங்கரிப்பார்கள் என்று சபதம் ஏற்றிருந்தோம். இன்று அது நிறைவேறி இருக்கிறது.

1996ல் ஒரு சட்டப்பேரவை உறுப்பினரும் அதன் பிறகு 2001ல் நான்கு சட்டப்பேரவை உறுப்பினரும் இருந்தார்கள். இப்போது 2021ல் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்களை பாஜக பெற்றிருக்கிறது. மூத்த தலைவர் M.R. காந்தி, பாஜக அகில பாரத மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், சிறந்த கல்வியாளர் C.சரஸ்வதி, ஆகியோர் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இவர்களின் அனுபவம், தொலைநோக்கு சிந்தனை, ஆற்றல் தமிழக மக்களுக்கு பெரிதும் பயன்படும்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்காக பிரச்சாரங்கள் மேற்கொண்ட பாரதபிரதமர் நரேந்திர மோடி, அகில பாரத தலைவர் J.P.நட்டா , உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், ராஜ்நாத்சிங், ஸ்மிருதி ராணி, உள்பட அனைத்து தலைவர்களுக்கும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி K. பழனிசாமி மற்றும் அனைத்து தமிழக தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தலில் கடுமையாக உழைத்திட்ட பாஜக, அதிமுக, பாமக, தமாக உள்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்து 76 இடங்களை வழங்கிய தமிழக மக்களுக்கும் தமிழக பாஜகவின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x