Published : 03 May 2021 09:10 AM
Last Updated : 03 May 2021 09:10 AM
இனமானப் போரில் திராவிடம் வென்றது என தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
உழைப்பு - ஒருங்கிணைப்பு - உன்னத வாக்குறுதிகளுக்கான வெற்றி! வாக்குறுதிகளையும் - மக்கள் நம்பிக்கைகளையும் செயலாக்குவார் நமது தளபதி! செயற்கரிய செயல் புரியவிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்!
நடைபெற்ற தேர்தல் என்ற இனமானப் போரில், ‘திராவிடம் வெல்லும் - நாளைய வரலாறு இதைச் சொல்லும்‘ என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்; அது மக்கள் தீர்ப்பின்மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டது.
கருணாநிதி தலைவர்கள் இல்லை என்பதால், ‘வெற்றிடம்‘ என்று கூறியவர்களுக்கு பெரியார் பூமியான இந்நிலத்தில் எப்போதும் வெற்றிடம் ஏற்படாது; அரசியலில் மற்றவர்கள் வந்து சேரவேண்டிய கற்றிடம் என்று கூறி, அந்தப் பெரும்பணியை, சுகமான சுமையாய்த் தாங்கிய நம் ஆற்றல்மிகு சகோதரர் உழைப்பின் உருவம் - பண்பின் பெட்டகமான மானமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தி.மு.க.வின் தலைமையேற்று திறம்படக் கடமையாற்றுவார் என்றும் பிரகடனப்படுத்தினோம். அதைக் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்தம் தெளிந்த, கனிந்த அணுகுமுறையின்மூலம் அகிலம் அறியச் செய்து சரித்திர சாதனையைப் படைத்தார்.
இந்த தேர்தல் அதற்கான பரிசோதனைக் கூடம் என்று சரித்திரம் வகுத்த -வைத்த தேர்வில், அவர் திட்டமிட்ட வியூகங்கள், திரண்ட உழைப்பின்மூலம், ஏச்சுகள், அவதூறுகள், அச்சுறுத்தல்களையெல்லாம் அவரது லட்சியப் பயிராம் கொள்கை விளைச்சலுக்கு உரமாக்கிக் கொண்டு உழைத்தார்; வென்றார்.
புதிய சாதனை வரலாறு படைத்தார்!
வெறும் தேர்தல், அரசியல் கண்ணோட்டத்திற்கான கூட்டணி அல்ல எமது கூட்டணி என்று அறிவித்து, அனைவரையும் அரவணைத்து, ஒருங்கிணைத்து போராட்டக் களங்களில் இலட்சியங்களுக்காக பூத்துக் காய்த்துக் கனிய வைத்து, பாதுகாத்தது - பரிபக்குவமாய் வேளாண்மை செய்யும் ஒரு தோட்டக்காரராக இருக்கும் இவரது வியூகம் - உலகம் வியக்கத்தக்கதும்; பாராட்டி எவரும் பாடம் கற்கவேண்டியதுமான அரசியல் வகுப்பும் ஆகும்!
காரணம், அவர் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி எல்லோருடைய பாடங்களையும் கற்றுணர்ந்த பண்பாளராக முதிர்ந்ததுதான்.
மக்களுக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளும், மக்கள் அவரிடம் வைத்த நம்பிக்கையும் என்றும் வீண் போகாது; விரைவில் செயற்கனிகளாக, மக்களுக்கே சுவையைத் தரும் என்ற உறுதியோடு, தமிழ்நாட்டின் கடந்தகால இருட்டுக்கு விடை கொடுத்து, பகலவனின் வெளிச்சம் பாயும் தலைமை எம் ஆட்சி என்று செயல்பட்டு, புதியதோர் வரலாற்றை உருவாக்குவார் என்ற மிகுந்த நம்பிக்கையோடு நமது நல்வாழ்த்துகள் உரித்தாகுக.
மக்களின் தெளிவான தீர்ப்புக்காக முதலில் அவர்களைப் பாராட்டி, சமூகநீதி மண் - பெரியார் மண் என்பதை மீண்டும் உணர்த்திடும் வகையில் ஆட்சி அமைவதற்குக் காரணமான வாக்காளப் பெருமக்களுக்கு நமது நன்றியையும், மகிழ்ச்சியையும் உரியதாகுக்குகிறோம்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT