Published : 02 May 2021 04:28 PM
Last Updated : 02 May 2021 04:28 PM

அறுதிப் பெரும்பான்மை கிடைத்தது: 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைகிறது

சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடர்ந்து முன்னிலையில் திமுக கூட்டணி உள்ளது. தற்போது திமுக மட்டும் 119 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக கூட்டணி தற்போது 153 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் திமுக ஆட்சி அமைவது உறுதியாகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக, மநீம ஆகிய கட்சிகள் தனித்தனியாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, மமக, கொமதேக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அமமுக கட்சியில் தேமுதிக, ஒவைசியின் கட்சி இணைந்து போட்டியிட்டது. மக்கள் நீதி மய்யத்தில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட்டது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது.

தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. திமுக தனித்து 140க்கும் மேற்பட்ட இடங்களையும், திமுக கூட்டணி 180 இடங்கள் வரையிலும் வெல்லும் எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய இன்று காலையில் இருந்தே திமுக, அதிமுக கூட்டணி போட்டி கடுமையாக இருந்தது. திமுக கூட்டணி 142 இடங்களில் முன்னிலையும் அதிமுக கூட்டணி 90 இடங்களிலும் முன்னணியில் இருந்தது.

இதே நிலை தொடர்ந்து நீடித்து வந்தது. திமுக 110 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது 119 தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. திமுக சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக 4 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 5 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றதன் மூலம் திமுக 128 தொகுதிகளில் முன்னிலை பெற்று எளிதாக ஆட்சி அமைக்கிறது. அறுதிப் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் கூடுதலாகவே 8 இடங்களை திமுக பெற வாய்ப்புள்ளது.

திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 17 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தலா 6 இடங்களில் போட்டியிட்ட இடதுசாரிகள் தலா 2 இடங்களிலும், தனிச் சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4 தொகுதிகளிலும் மொத்தமாக 153 தொகுதிகளில் முன்னிலை பெறுகிறது.

இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடிக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி என்கிற இரண்டு ஆளுமைகளுக்குப் பின் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டு முதல்வர் ஆகிறார் ஸ்டாலின்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x