Published : 02 May 2021 02:50 PM
Last Updated : 02 May 2021 02:50 PM
புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 2-வது முறையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட்டு வருகின்றன.
தொடக்கத்தில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை தொகுதியின் முதல் சுற்றில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்த வரிசை எண் வேறுபாட்டு இருந்தது. இதையடுத்து, திமுக, அமமுகவினர் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். இதைத் தொடர்ந்து, இவர்களுக்கும், அதிமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து சமரச முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, நீண்ட நேரத்துக்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட்டு வாக்குகள் தொடர்ந்து எண்ணுவதற்கு அனுமதிக்கப்பட்டது. அதன்படி, எண்ணப்பட்ட முதல் சுற்றில் திமுக வேட்பாளர் எம்.பழனியப்பனை விட அமைச்சர் சி.விஜயபாஸ்கர் 2,437 வாக்குகள் முன்னிலையில் இருந்தார்.
இதையடுத்து, 2-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடந்து வந்தது. அதிலும், 2 வாக்குப்பதிவு இயந்திரங்களின் வரிசை எண்ணில் வேறுபாடு இருந்தது. இதையடுத்து, மீண்டும் திமுக, அமமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டனர்.
இதையடுத்து 2-வது முறையாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. காலையில் இருந்தே வாக்கு எண்ணும் அறையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இருந்தார்.
நண்பகலில் பிற தொகுதிகளில் சராசரி 8 சுற்றுகள் எண்ணப்பட்டிருந்த நிலையில், இந்த தொகுதியில் 2-வது சுற்றே நிறைவடையாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து, திமுக வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.செல்லபாண்டியன், மாவட்டத் தேர்தல் அலுவலர் பி.உமா மகேஸ்வரியிடம் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், "முதல் சுற்றில் 6- வது மேஜையில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தின் எண் மாறி இருந்தது. இதேபோன்று, 2-வது சுற்றில் 4, 5, 14-வது மேஜைகளில் இருந்த வாக்குப்பதிவு எண்களும் மாறி இருந்தன.
இதற்கு முன்பு ஏப்.7-ம் தேதி விராலிமலை தொகுதியில் 27-வது வாக்குப்பதிவு இயந்திரத்தின் காகித சீல் ஒன்று, வாக்கு எண்ணும் மையத்தில் கேட்பாரற்றுக் கிடந்தது. இதனால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
ஆகையால், எங்களது புகாரைத் தீர்க்கும் வரை வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்'' என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, வாக்கு எண்ணிக்கையை நடத்தக்கோரி வாக்கு எண்ணும் மையத்தின் வெளிப்பகுதியில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT