Published : 02 May 2021 02:07 PM
Last Updated : 02 May 2021 02:07 PM
நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. திமுகவின் கோட்டை எனக் கருதப்பட்ட நீலகிரி மாவட்டத்தின் இரு தொகுதிகளிலும் அதிமுகவும், உதகையில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளன.
உதகை சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் மு.போஜராஜன் முதல் சுற்றிலிருந்தே முன்னிலை பெற்று வந்தார். முதல் 8 சுற்றுகளில் 7 ஆயிரம் வாக்குகளில் முன்னிலை பெற்று வந்த நிலையில், 9, 10 மற்றும் 11 சுற்றுகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் முன்னிலை பெற்று, வாக்கு வித்தியாசத்தை 1,072 வாக்குகளாகக் குறைத்துள்ளார்.
12-ம் சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷ் 35,633 வாக்குகளும், பாஜக வேட்பாளர் மு.போஜராஜன் 35,156 வாக்குகளும் பெற்றனர்.
குன்னூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கப்பச்சி டி,வினோத் தொடக்கத்திலிருந்தே முன்னிலை பெற்றுள்ளார். குன்னூர் தொகுதியில் நடந்த 10 சுற்றுகளில் திமுக வேட்பாளர் க.ராமசந்திரனை விட 3,044 வாக்குகளில் வினோத் முன்னிலை பெற்று வருகிறார். 10-ம் சுற்று இறுதியில் அதிமுக வேட்பாளர் கப்பச்சி டி.வினோத் 32,958 வாக்குகளும், திமுக வேட்பாளர் 29,914 வாக்குகளும் பெற்றனர்.
கூடலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. தொடக்கத்திலிருந்து அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் முன்னிலை பெற்று வந்தாலும், திமுக வேட்பாளர் காசிலிங்கம் கடும் போட்டி கொடுத்து வருகிறார்.
இந்தத் தொகுதியில் 16 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளர் 2,205 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் 51,392 வாக்குகளும், திமுக வேட்பாளர் எஸ்.காசிலிங்கம் 49,187 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT