Published : 02 May 2021 12:24 PM
Last Updated : 02 May 2021 12:24 PM
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் தாராபுரம் தொகுதியில் ஆரம்பம் முதலே பாஜக வேட்பாளர் எல்.முருகன் முன்னிலை வகித்து வருகிறார்.
தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுகவில் கயல்விழி செல்வராஜ், அமமுகவில் கலாராணி, நாம் தமிழர் கட்சியில் ரஞ்சிதா, மக்கள் நீதி மய்யத்தில் சார்லி ஆகியோர் உட்பட 14 பேர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் ஆரம்பம் முதலே பாஜகவின் மாநிலத் தலைவர் எல்.முருகன் முன்னிலை வகித்து வருகிறார். தாராபுரம் தொகுதியில் 2,783 தபால் வாக்குகள் உள்ளன. தொகுதிக்கு உட்பட்ட குண்டடம் பகுதி காசிலிங்கம் பாளையம், அப்பநாயக்கன் பாளையம், வெறுவேடம் பாளையம் ஆகிய பகுதிகளில் பாஜக ஆரம்பம் முதலே அதிக வாக்குகளைப் பெற்று வருகிறது.
4-ம் சுற்று முடிவில், பாஜகவின் எல்.முருகன் 19,475 வாக்குகளைப் பெற்றுள்ளார். திமுகவின் கயல்விழி செல்வராஜ் 16,974 வாக்குகளைப் பெற்றுள்ளார். இரண்டுக்குமான வித்தியாசம் 2,501 ஆக இருந்தது.
இந்த நிலையில் 6-ம் சுற்று முடிவில் பாஜக 22,904 வாக்குகளும், திமுக 20,684 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 932 வாக்குகளும், அமமுக கலாராணி 158 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 258 வாக்குகளும் பெற்றுள்ளன. நோட்டா 538 வாக்குகளைப் பெற்றுள்ளது. அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளை விட நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT