Last Updated : 02 May, 2021 09:45 AM

 

Published : 02 May 2021 09:45 AM
Last Updated : 02 May 2021 09:45 AM

தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணி முன்னிலை

எஸ்.பி.வேலுமணி: கோப்புப்படம்

கோவை 

தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணி முன்னிலை வகிக்கிறார்.

கோவை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மொத்தம் 4,437 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்தவுடன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையமான, ஜிசிடி கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டது. இன்று வாக்கு எண்ணிக்கை (மே 02) தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, ஜிசிடி கல்லூரி வளாகம் மற்றும் அதைச் சுற்றிலும் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நுழையும் அனைவரையும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை செய்தனர். பின்னர், அவர்களின் உடல் வெப்பநிலை ஆய்வு செய்யப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டனர். முகக்கவசம் கட்டாயம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான எஸ்.நாகராஜன் மேற்பார்வையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் தொகுதிகள் வாரியாக வாக்கு எண்ணும் பணி நடந்து வருகிறது. காலை 8 மணிக்கு முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் தலா இரு மேஜைகள் அமைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு அலுவலர், இரு உதவியாளர்கள், ஒரு நுண்பார்வையாளர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என, 5 பேர் அஞ்சல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டனர். எண்ணப்பட்ட அஞ்சல் வாக்குகள் உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

முதல் கட்டமாக, தற்போதைய நிலவரப்படி மொத்தம் 19 ஆயிரத்து 29 அஞ்சல் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், தொண்டாமுத்தூர் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் அஞ்சல் வாக்குகள் கொண்டு வரத் தாமதம் ஆனதால், அங்கிருந்த முகவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 8 மணிக்குப் பின்னர் வந்த அஞ்சல் வாக்குகளை எண்ணக் கூடாது எனவும் கோஷம் எழுப்பினர். பின்னர், ஆட்சியர் எஸ்.நாகராஜன் அங்கு வந்து பேசினார். இதைத் தொடர்ந்து, அரை மணி நேரம் தாமதமாகத் தொண்டாமுத்தூர் தொகுதியில் அஞ்சல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின.

அதேபோல், காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதற்காக கவுண்டம்பாளையம் தொகுதியில் 20 மேஜைகளும், அதைத் தவிர மீதமுள்ள 9 தொகுதிகளில் தலா 14 மேஜைகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் வாக்கு எண்ணிக்கைக்கான அலுவலர், உதவியாளர், நுண் பார்வையாளர் ஒருவர் என 3 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், மேட்டுப்பாளையம் தொகுதி 30 சுற்றுகளாகவும், சூலூர் தொகுதி 34 சுற்றுகளாகவும், கவுண்டம்பாளையம் தொகுதி 34 சுற்றுகளாகவும், கோவை வடக்குத் தொகுதி 36 சுற்றுகளாகவும், தொண்டாமுத்தூர் தொகுதி 34 சுற்றுகளாகவும், கோவை தெற்கு தொகுதி 26 சுற்றுகளாகவும், சிங்காநல்லூர் தொகுதி 33 சுற்றுகளாகவும், கிணத்துக்கடவு தொகுதி 35 சுற்றுகளாகவும், பொள்ளாச்சி தொகுதி 23 சுற்றுகளாகவும், வால்பாறை தொகுதி 21 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

முதல் சுற்றுகளின் அடிப்படையில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தொண்டாமுத்தூரில் அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி, சிங்காநல்லூரில் திமுகவின் நா.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x