Published : 02 May 2021 09:01 AM
Last Updated : 02 May 2021 09:01 AM
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. தபால் வாக்குகள் அடிப்படையில் என்.ஆர்.காங். கூட்டணி 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்.6 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 81.70 சதவீதம் வாக்குகள் பாதிவாகின. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளுக்கு புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசு பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரி, மோதிலால் நேரு தொழில்நுட்பக் கல்லூரி, தாகூர் அரசு கலைக்கல்லூரி ஆகிய 3 மையங்களிலும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு அங்குள்ள அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும், மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகளுக்கு, அங்குள்ள அரசு மண்டல நிர்வாக அலுவலக மையங்கள் என, 6 மையங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று (மே. 2) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கரோனா தொற்றில்லா சான்றிதழ் வைத்திருந்த அதிகாரிகள், அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். சான்றிதழ் இல்லாதவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையங்களின் முகப்பிலேயே ரேபிட் கிட் முறையில் பரிசோதனை செய்யப்பட்டு உடனடியாக வழங்கப்பட்டன. அனைவருக்கும் உடல் வெப்பம் பரிசோதனை செய்யப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்தில் முகக்கவசம் , கையுறை , சானிடைசர்கள் வழங்கப்பட்டன.
தேர்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டு நெறிகளின்படி, அறையின் மொத்த இருக்கையில் 50 சதவீதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதால், அதற்கேற்ப நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
வாக்கு எண்ணும் மேஜைகளின் எண்ணிக்கை 7-ல் இருந்து 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.
முதலில் மாநிலம் முழுவதும் பதிவான 17 ஆயிரத்து 124 தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை பணிகளில் 1,400 வாக்கு எண்ணும் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தபால் வாக்குகள் அடிப்படையில் என்.ஆர்.காங் தலைமையிலான கூட்டணி 5 தொகுதிகளிலும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
3 கட்டமாக வாக்கு எண்ணிக்கை:
தொடர்ந்து புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளில், 8 தொகுதிகள் வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் கட்டமாக மண்ணாடிப்பட்டு, மங்கலம், கதிர்காமம், காமராஜர்நகர், லாஸ்பேட்டை, உப்பளம், நெல்லித்தோப்பு, ஏம்பலம் ஆகிய 8 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
அதே நேரத்தில் காரைக்காலில் நெடுங்காடு, திருநள்ளாறு தொகுதிகளுக்கும், மாஹே, ஏனாம் ஆகிய தொகுதிகள் என மொத்தம் 12 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை முதல் கட்டமாக நடைபெறுகிறது. முதல் 8 தொகுதிகளுக்கான முடிவுகள் பிற்பகல் 1 மணிக்குத் தெரியவரும். இதனைத் தொடர்ந்து, 2-வது கட்டமாக புதுச்சேரியில் உள்ள திருபுவனை, வில்லியனூர், இந்திராநகர், முத்தியால்பேட்டை, காலாப்பட்டு, உருளையன்பேட்டை, அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம் ஆகிய 8 தொகுதிகள் மற்றும் காரைக்காலில் காரைக்கால் வடக்கு, தெற்கு ஆகிய 2 தொகுதிகள் என மொத்தம் 10 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகிறது.
மூன்றாம் கட்டமாக, புதுச்சேரியில் ஊசுடு, உழவர்கரை, தட்டாஞ்சாவடி, ராஜ்பவன், முதலியார்பேட்டை, மணவெளி, பாகூர் ஆகிய 7 தொகுதிகள் மற்றும் காரைக்காலில் நிரவிதிருப்பட்டினம் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT