Published : 02 May 2021 08:42 AM
Last Updated : 02 May 2021 08:42 AM
தமிழகத்தில் அடுத்த ஆட்சியை பிடிக்கப்போவது யார்? யாருக்கு வெற்றி மகுடம் சில மணி நேரத்தில் முன்னணி நிலவரம் தெரியவரும். சூரியன் உதிக்குமா? தாமரையுடன் இலை மலருமா? தமிழகத்தில் கரோனாவைத் தாண்டி அனைவர் முன் உள்ள கேள்விக்கு விடை சில மணி நேரத்தில்.
தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் சற்று நேரத்தில் வெளியாக உள்ளன. வெற்றி வாய்ப்பு எங்களுக்கே என்று பலரும் கூறுகின்றனர். ஆனால், உண்மையான முடிவு இவிஎம்முக்குள் தூங்குகிறது. அதில் தோன்றும் மின்சார வெளிச்சம் இரண்டில் ஒரு கட்சிக்கு வெளிச்சத்தைக் கொடுக்கப் போகிறது.
இருப்பவர் தொடருவாரா? இழந்தவர் பிடிப்பாரா? இருவருக்கும் மட்டும்தான் வாய்ப்பா? எங்களுக்கும் உண்டு என டார்ச்சை அடித்துக் காண்பிக்கின்றனர். அவர்கள் சாதிப்பார்களா? அனைவரின் முன் உள்ள கேள்வி இது.
தமிழகத்தில் இரு பெரும் ஆளுமைகள் இல்லா ஏற்பட்ட வெற்றிடம் பலருக்கும் ஆட்சியைப் பிடிக்கும் ஆவலைத் தூண்டியது. தமிழகத்தில் உள்ள குழப்பமான சூழ்நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பலரும் முயன்றனர்.
சிலர் நான்தான் வெற்றிடத்தை பிடிப்பேன் எனக் கிளம்பினர். சிலருக்கு இப்போதுதான் தமிழகத்தின் நிலைமை தெரிகிறது என்று கட்சியும் ஆரம்பித்தனர். கட்சியில் வலுவான ஆதிக்கம் செலுத்தியவர் வெளியேற்றப்பட்டார், வெளியில் இருந்து தியானம் செய்தவர் உள்ளே அழைக்கப்பட்டார். அத்தனைக்கும் முக்கிய சுவிட்ச் வேறிடத்தில் இருந்தது.
அதன் பின்னர் 4 ஆண்டுகள் தமிழகத்தில் பல மாற்றங்கள், 'அம்மா'வே உலகம் என்று வாழ்ந்தவர்கள் அவர் எதிர்த்த திட்டங்களுக்கெல்லாம் ஆதரவளித்தனர். அத்தனையையும் மக்கள் மவுனமாகப் பார்த்தனர்.
தமிழகத்தின் பிரச்சினைகள் சில நேரங்களில் திசை திருப்பப்பட்டன. இந்நிலையில் அவர் வரத்தான் போகிறார் அப்புறம் பாருங்கள் என்று பெரிய பிம்பமாக அவர் காட்டப்பட்டார். அவரும் அப்படித்தான் நம்பினார். நான் நேரடியாக அங்கு வருவேன், எம்ஜிஆர் ஆட்சி தருவேன் என்றார். பெரிதாகக் கிளம்பிய அவர் இடையில் காணாமல் போனார். ரெண்டு படங்களில் நடித்தார், மீண்டும் வந்தார். வருவேன் கண்டிப்பாக வருவேன் என்று சொல்லிவிட்டு கரோனாவைக் காரணம் காட்டி வராமல் இருந்துவிட்டார்.
இடையில் மேலோட்டமாக பிரச்சினைகளைப் பேசினார் ஒருவர். போராட்டங்கள் இல்லாமல் திண்டாட்டம் தீராது என்ற பொதுமொழியே எனக்கு வெறுப்பு என்றார். விவசாயி மகன் என்றார், காந்தியின் சீடன் என்றார், கிராம சபை என்றார், விவசாயிகள் போராட்டம் என்றபோது வாய்மூடி மவுனமானார். இதோ வருகிறார், வார்டுதோறும் எல்லாம் ரெடி அவருக்கு நேர்மைதான் பிடிக்கும், பெரிய மாநாடு, கட்சி பேர் அறிவிப்பு, இதுதான் சின்னம் என்றெல்லாம் மீண்டும் பெரிய பிம்பம் காட்டப்பட்டது.
அப்போதுதான் வந்தது அந்த வைரஸ். அனைவரையும் பிடித்துப்போன வைரஸுக்கு ஏழை, பணக்காரன் யார் எனத் தெரியவில்லை. இரண்டு திராவிடக் கட்சிகளும் களத்தில் நின்றன தோழமைக் கட்சிகளோடு. எம்ஜிஆர் இடத்தை நிரப்புவேன் என்றவர் வராமலேயே போனார். மாற்றம் ஏற்படும் என நினைத்தவர்களுக்கு சப்பென்று ஆகிப்போனது. தமிழக மக்களுக்கும்தான்.
மாற்றம் வேண்டும் என ஒரு பக்கமும் ஏன் வேண்டும் என மறுபக்கமும் பெரும் பிரச்சாரம், மக்கள் கையில் தராசு தட்டு. தினம் தினம் பிரச்சினைகள் ஒருபக்கம் தட்டு இறங்க, மாற்றம் செய்வோம் இந்த ஆட்சி தொடரட்டும் என்ற வாக்குறுதிகள் மறுதட்டில் வைக்கப்பட, மக்கள் சிந்தனையில் மறுசுழற்சி தேவையா? இருப்பது இருக்கட்டுமா என்கிற எண்ண ஓட்டம்.
இருவரில் ஒருவரை நிராகரிக்கவும் ஒருவரைத் தேர்வு செய்யவும் நடந்தது அந்தத் தேர்வு. இருப்பவரே தொடருவாரா? இழந்தவர் பிடிப்பாரா? அம்மாவின் பிள்ளைகளா? தந்தை வழி மைந்தனா? வாக்கு பொத்தான் அழுத்தப்பட்டு 25 நாட்கள் அடைகாத்தலுக்குப் பின் இதோ இன்று முடிவு. வெற்றி மகுடம் யாருக்கு? இன்னும் சில மணி நேரத்தில் முடிவுகள் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT