Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குஎண்ணிக்கை பணிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் என மொத்தம் 73 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், உத்திரமேரூர், பெரும்புதூர், ஆலந்தூர் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை பொன்னேரிக்கரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில் இன்று (மே 2) நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், செய்தியாளர்கள் என மொத்தம் 2,285 பேருக்கு வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்ல அனுமதி அட்டை அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இவர்களுக்கு கரோனாபரிசோதனை செய்யப்பட்டதில் 73 பேருக்கு கரோனா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, இவர்கள் 73 பேரும் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், மருத்துவ உதவி தேவைப்படுவோர், மருத்துவமனைக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,212 பேர் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில்..
இதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், செய்தியாளர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 2,672 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 81 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT