Last Updated : 04 Dec, 2015 01:23 PM

 

Published : 04 Dec 2015 01:23 PM
Last Updated : 04 Dec 2015 01:23 PM

கடலூரில் மீட்பு நிவாரணப் பணிகள் துரிதம்

கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் 15 நாட்களுக்குப் பின்னர் இன்று காலை 10.30 மணி முதல் வெயில் அடித்தது.

வியாழக்கிழமை இரவு முழுவதும் மழை பெய்தது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். இந்நிலையில் இன்று காலை 10.30 மணி முதல் வெயில் அடித்தது.

கடலூருக்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவற்றை முறையாக விநியோகிக்கும் பணியும் நடந்து வருகிறது.

ராம் நகர், ஆனந்த் நகர், தானம் நகர் பகுதிகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற உள்ளாட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

79 பேர் பலி:

நவ.9 தேதி பெய்த கனமழையால் கடலூர் மாவட்டத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 66 பேர் இறந்தனர். பல குடிசைகள் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது.

பண்ருட்டியை அடுத்த பெரியக்காட்டுப்பாளையம், விசூர், குறிஞ்சிப்பாடி அடுத்த கல்குணம், பூதம்பாடி, அந்தராசிப் பேட்டை, ஓணாண்குப்பம், வரதராஜன்பேட்டை, மருவாய்,குள்ளஞ்சாவடி, தங்களிக்குப்பம், வழுதலம்பட்டு, அகரம், கடலூர் நகரப் பகுதியை ஒட்டிய செல்லங்குப்பம், பீமா நகர்,தானம் நகர், காட்டுமன்னார்கோயிலை அடுத்த திருநாரையூர், பொன்னாங்கன்னிமேடு உள்ளிட்டப் பகுதிகள் பெருத்த சேதத்துக்குள்ளாகியது.

இந்நிலையில் மீண்டும் பெய்த கனமழையால் கடலூரில் மழை வெள்ளத்தில் இறந்தோரின் எண்ணிக்கையும் 79 ஆக உயர்ந்துள்ளது.

'தி இந்து' வாசகர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் நெய்வேலி பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

என்எல்சி சுரங்கப் பணிகள் பாதிப்பு: மின் உற்பத்தி பாதிப்பு

கனமழையால் என்எல்சி சுரங்கத்தில் மழைநீர் புகுந்துள்ளது, மழை நீரை வெளியேற்றக் கூடிய ராட்சத பம்புகளும் நீரில் மூழ்கியுள்ளதால் மழைநீரை வெளியேற்ற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணியும், பராமரிப்புப் பணிகளும் தடை பட்டுள்ளது.

அனல்மின் நிலையங்களில் ஈரப்பதம் உள்ள பழுப்பு நிலக்கரியை பயன்படுத்துவதால் மின் உற்பத்தியின் அளவும் குறைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x