Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM
கரோனா கட்டுப்பாடுகளால் பெட்டிக்கடை முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை முடங்கியிருக்கும் நிலையில், விவசாயப் பணிகள் மட்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பல லட்சக்கணக்கான ஏக்கரில் பயிர் சாகுபடி நடைபெற்று வருகிறது.
கரோனா 2-வது அலை பாதிப்பால், கடும் கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கும், ஞாயிறுதோறும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டைப்போல முழுஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்ற பீதியில் மக்கள் உள்ளனர்.
விவசாயத்துக்கு திரும்பும் தொழிலாளர்கள்
கடந்த ஆண்டு முழு முடக்கத்தால் இழந்த வாழ்வாதாரத்தை இன்னமும் மீட்கமுடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். இந்நிலையில், கரோனா 2-வது அலைகாரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால், பெட்டிக் கடையில் இருந்து பெரிய தொழிற்சாலைகள் வரை பாதிப்பை சந்தித்துள்ளன. உற்பத்தி குறைப்பு, விற்பனை சரிவு, வேலையிழப்பு, வருவாய் இழப்பு என தொழில் துறை முடங்கி வருகிறது. சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இதேநிலைதான் நீடிக்கிறது.
இந்நிலையில், வேளாண் பணிகள் மட்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. விவசாயப் பணிகளுக்கு ஆள் கிடைக்காத காலம் மாறி, திருப்பூர் போன்ற இடங்களுக்கு வேலைக்குச் சென்ற பலரும் ஊருக்குத் திரும்பி, வேளாண் சாகுப்படிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் மொத்த நிலப் பரப்பு 130.33 லட்சம் ஏக்கர். 2015-16-ம் ஆண்டு 10-வது வேளாண்மை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 79.38 லட்சம் நில உடமைதாரர்கள் 59.71 லட்சம் ஹெக்டேர் (ஒரு ஹெக்டேர் இரண்டரை ஏக்கர்) நிலத்தில் சாகுபடி செய்கின்றனர். 63.50 லட்சம் ஆண் விவசாயிகள், 15.59 லட்சம் பெண் விவசாயிகள் முறையே 47.88 மற்றும் 10.36 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்து வருகின்றனர்.
சாகுபடிப் பரப்பு அதிகரிப்பு
தமிழகத்தில் 2020-21-ம் ஆண்டில் 111.93 லட்சம் ஏக்கர் பரப்பில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டு சாகுபடி நடைபெற்ற 46.76 லட்சம் ஏக்கர் பரப்பைவிட 3.29 லட்சம் ஏக்கர் பரப்பளவு அதிகமாகும். 24.49 லட்சம் பரப்பில் சிறு தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட 23.63 லட்சம் ஏக்கர் பரப்பைவிட 86 ஆயிரம் ஏக்கர் பரப்பு அதிகமாகும். பயறு வகை பயிர்கள் 20.13 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
உணவு தானியப் பயிர்கள் மொத்தம் 94.67 லட்சம் ஏக்கரில் சாகுபடியாகின்றன. இது, கடந்த ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட 90.57 லட்சம் ஏக்கரைவிட 4.09 லட்சம்ஏக்கர் பரப்பு அதிகம். இதர பயிர்களான எண்ணைய் வித்துகள் 11.65 லட்சம் ஏக்கரில் சாகுபடியாகின்றன. இது, கடந்த ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட 9.75 லட்சம் ஏக்கரைவிட 1.89 லட்சம் ஏக்கர் அதிகமாகும்.
மேலும், 2.57 லட்சம் ஏக்கரில் பருத்தியும், 3.04 லட்சம் ஏக்கரில் கரும்பும் சாகுபடி செய்யப்படுகின்றன.
கரோனா காலத்தில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் வேளாண் சாகுபடி, அறுவடை, விளை பொருட்கள் விற்பனை என அனைத்துக்கும் உதவுவதுடன், விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பாலமாகவும் வேளாண்மைத் துறை செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT