Published : 02 May 2021 06:58 PM
Last Updated : 02 May 2021 06:58 PM
2021 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கும், திமுக கூட்டணிக்கும் பெரிய அளவில் வெற்றியை அளித்துள்ளது. தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைப்பதன் மூலம் ஸ்டாலின் முதல்வர் ஆகிறார்.
தமிழக அரசியல் வரலாற்றில் திமுக எழுச்சியைப் பெற்ற ஆண்டு என்றால் அது 1971ஆம் ஆண்டு திமுக பெற்ற வெற்றிதான். திமுக 1967இல் முதன்முதலாக ஆட்சியைப் பிடித்தது. முதல்வர் அண்ணா பொறுப்பேற்ற ஓராண்டிலேயே மறைய, கருணாநிதி முதல்வர் ஆனார்.
காங்கிரஸ் கட்சி அகில இந்திய அளவில் இரண்டாகப் பிளவுபட, தமிழகத்தில் போட்டியில்லா நிலையில் எம்ஜிஆர், கருணாநிதி எனும் இருபெரும் சக்திகள் இணைந்து பிரச்சாரம், பெரியாரின் கூடுதல் பிரச்சாரத்தால் 203 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட திமுக 184 தொகுதிகளில் தனித்து வென்றது.
அதன் பின்னர் 1989இல் 150 தொகுதிகளிலும், 1996இல் 173 இடங்களிலும் திமுக தனித்து வென்றது. இம்முறை எந்த சாதனையை திமுக முறியடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் தந்தையின் தலைமையிலான எந்த சாதனையையும் தனயன் ஸ்டாலின் முறியடிக்கவில்லை. ஆனாலும், அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்கிறார் ஸ்டாலின்.
கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை இரு முறை பூர்த்தி செய்த ஸ்டாலின்
திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இல்லாத தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்புவதாகப் பலரும் கூறி அரசியலில் குதித்தனர். கருணாநிதிக்குப் பின், ஜெயலலிதாவுக்குப் பின் ஆளுமைமிக்க தலைவர் தமிழக மக்களால் யாரும் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று பேசப்பட்டது. ரஜினியும், கமலும் எம்ஜிஆர் ஆட்சியைத் தருவோம் வெற்றிடத்தை நிரப்புவோம் என்றெல்லாம் கூறினர்.
ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக தலைமைப் பதவிக்கு வந்தவுடன் தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைத்துப் போட்டியிட்ட ஸ்டாலின் தலைமையிலான அணி 39 மக்களவைத் தொகுதிகளில் 38 தொகுதிகளை வென்றது. அப்போதெல்லாம் அந்த வெற்றியை அங்கீகரிக்காதவர்கள், ‘இது ஸ்டாலின் தலைமைக்குக் கிடைத்த வெற்றி அல்ல, ராகுல் காந்தி பிரதமர் ஆகவேண்டும் என அளிக்கப்பட்ட வாக்கு. உண்மையான தலைமை, ஆளுமை என்றால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலை வென்றால் மட்டுமே முடியும்’ என்று தெரிவித்தனர்.
2021 தேர்தலின் ஆரம்பத்தில் பல தடைகள் ஏற்பட்டன. ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஒதுங்கினார். பாஜக- அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையவில்லை. மறுபுறம் திமுக கூட்டணிக்குள்ளும் முட்டல் மோதல் ஏற்பட்டது. ஆனாலும், கூட்டணி உடையக் கூடாது என்பதில் உறுதியாக தோழமைக் கட்சிகளின் தலைவர்கள் இருந்தனர்.
இதன் மூலம் மிகப்பெரிய வெற்றியை ஸ்டாலின் தலைமையிலான அணி பெற்றுள்ளது. இதன் மூலம் கருணாநிதிக்குப் பின் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பியுள்ளார். நிதானமாகப் பிரச்சினைகளைக் கையாண்டு போராட்டங்களை வகுத்துக்கொண்டு சென்றதன் மூலம் தன்னைத் தலைவர்கள் வரிசையில் நிலைநிறுத்திக் கொண்டார்.
திமுகவின் இந்த வெற்றியின் மூலம் கூட்டணிக் கட்சிகளின் பலமும், ஒருங்கிணைத்த ஸ்டாலினின் தலைமைப் பண்பும் வெளிப்பட்டுள்ளது. திமுகவின் திட்டமிடப்பட்ட பிரச்சாரம், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக 100 நாளில் குறை தீர்க்கும் மனு வாங்கும் திட்டம், தேர்தல் அறிக்கை எனப் பல அம்சங்களைச் சொல்லலாம்.
திமுக மீது பல குறைகளை எதிர்க்கட்சியினர் கூறினாலும் அதையெல்லாம் மீறி ஸ்டாலின் செய்வார் என்கிற நம்பிக்கையில் மக்கள் வாக்களித்துள்ளனர். அந்த நம்பிக்கையை முதல்வராக ஸ்டாலின் தீர்ப்பாரா என்பதைக் காலம் பதில் சொல்லும்.
1980ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களில் 37 இடங்களைப் பெற்றது. ஆனால், அடுத்து சட்டப்பேரவைத் தேர்தலை வெல்லலாம் என்கிற நம்பிக்கையில் எம்ஜிஆர் ஆட்சியைக் கலைத்துவிட்டு சட்டப்பேரவை தேர்தலை திமுக-காங்கிரஸ் கூட்டணி சந்தித்தது. ஆனால், மீண்டும் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக கூட்டணி 14 இடங்களைக் கூடுதலாகப் பெற்று வென்றது. எம்ஜிஆர் மீண்டும் ஆட்சி அமைத்தார். மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியைச் சட்டப்பேரவைத் தேர்தலில் தக்கவைக்க கருணாநிதியால் முடியவில்லை. ஆனால், ஸ்டாலின் அதில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT