Published : 01 May 2021 07:41 PM
Last Updated : 01 May 2021 07:41 PM
கல்லூரிகளை கரோனா வார்டுகளாக மாற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று (மே. 01) வெளியிட்ட அறிக்கை:
"கடந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது கல்லூரிகள், சமூக நலக் கூடங்கள் கரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டன.
தற்போது கரோனா இரண்டாவது அலை மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.
படுக்கை வசதிகளை அதிகரிக்க சென்னையில் ஓரிரு கல்லூரிகள் கரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அறிகிறேன்.
இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மின்சாரம், குடிநீர் வசதி, கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ள கல்லூரிகளை மற்ற மாவட்டங்களிலும் கரோனா வார்டுகளாக மாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையும் தேவைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் உயர்தர தொழில்நுட்பங்கள், சிறந்த கட்டமைப்பு வசதிகள் கொண்ட பொறியியல் கல்லூரிகள் நிறைய இருக்கின்றன. அவற்றின் உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி, பொறியியல் மாணவர்களின் திறமையையும் பயன்படுத்தி, கரோனா சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.
கரோனா பரவல் சுனாமி போல தாக்குகிறது என சிறப்பு அதிகாரியே சொல்கிறார். வரும் முன் காக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT