Published : 01 May 2021 05:11 PM
Last Updated : 01 May 2021 05:11 PM
வெற்றி எனில் கொண்டாடத் தேவையில்லை. தோல்வி எனில் துவள வேண்டியதில்லை எனக் கட்சியினருக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக, கமல்ஹாசன் இன்று (மே 1) மநீம கட்சியினருக்கு எழுதிய கடிதம்:
"நாளை வெளியாக இருக்கும் தேர்தல் முடிவுகளுக்காக ஆவலோடு காத்திருப்பீர்கள். ஆர்வமிகுதியில் உங்கள் பாதுகாப்பை மறந்துவிடக் கூடாது.
வாக்கு எண்ணும் மையங்களில் கூட்டம் கூட வேண்டியதில்லை. அங்கீகரிக்கப்பட்ட முகவர்களைத் தவிர பிற கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஊரடங்கு விதிமுறைகளைப் பின்பற்றி வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகளை விட உங்களுடைய பாதுகாப்பும், உங்கள் குடும்பத்தாரின் பாதுகாப்புமே எனக்கு முக்கியமானது. வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் நான் உங்களுக்கு எழுதிய கடிதத்தின் வரிகளை இங்கே மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.
தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவென்பது கிடையாது என்பதை நாம் நன்கறிவோம். இந்தத் தேர்தல் நமக்கு ஒரு புதிய அனுபவம்… புதிய தொடக்கம்… இந்தத் தேர்தல் பயணத்தில் மக்களுக்கு நம் மீதிருந்த நம்பிக்கையை உணர்ந்திருக்கிறோம். மக்கள் அன்பே நம் பலம். மக்கள் நலனே எதைக் காட்டிலும் முதன்மையானது.
வெற்றி எனில் கொண்டாடத் தேவை இல்லை. தோல்வி எனில் துவள வேண்டியதில்லை. எதுவரினும் மக்கள் பணிகளைத் தொடருங்கள். இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். 'நாமே தீர்வு' நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அன்றாடம் வரும் அறிக்கைகள் மூலம் அறிகிறேன். உங்களை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.
மக்களுக்காக, மக்களுடன் களத்தில் நிற்போம்".
இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT