Published : 01 May 2021 04:50 PM
Last Updated : 01 May 2021 04:50 PM
தொழிலாளி இறப்பில் மர்மம் இருப்பதால், நீதிமன்ற உத்தரவுப்படி தொழிலாளியின் உடல் மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நெப்பத்தூரில் உள்ள ஒரு தனியார் செங்கல் சூளையில் வேலைபார்த்து வந்தவர் சீனிவாசன் (47). செங்கல் சூளையில் கடந்த 27 ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் சீனிவாசன் பணிநீக்கம் செய்யப்பட்டார். கடந்த 17-ம் தேதி சீனிவாசனை வேலைக்கு வரச் சொன்னதாக செல்போனில் தகவல் வந்துள்ளது. அதன்பேரில், வேலைக்குச் சென்ற சீனிவாசன், செங்கல் சூளையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால், சீனிவாசனைக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுவிட்டதாகக் கூறி, செங்கல் சூளை உரிமையாளர் சுரேஷ், அவரது மகன் சித்தார்த், இரவு நேர மேற்பார்வையாளர் மோகன்ராஜ் ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்த வலியுறுத்தி, சீனிவாசனின் உறவினர்களும், கிராம மக்களும் சாலை மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
தற்கொலைக்குத் தூண்டுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சீர்காழி போலீஸார் வழக்குப் பதிந்து, சுரேஷ், சித்தார்த், மோகன்ராஜ் ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். ஆனால், அதை கிராம மக்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மருத்துவரும், ஆய்வு செய்த குழுவினரும் சீனிவாசனின் உடலில் காயம் இருப்பதாகக் கூறினர். ஆனால், போலீஸார் கொலை வழக்குப் பதியவில்லை.
இது தொடர்பாக, கிராம மக்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், சீனிவாசன் கொலை செய்யப்பட்டதாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை அவசர அவசரமாக சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், மனுதாரரின் சந்தேகத்தில் முகாந்திரம் இருப்பதால், கொலை வழக்குப் பதியும்வரை, சீனிவாசனின் உடலை அரசுதான் பாதுகாக்க வேண்டும் என்று அண்மையில் உத்தரவிட்டனர். இதனால் சீனிவாசனின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகும் சீர்காழி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT