Published : 21 Dec 2015 11:18 AM
Last Updated : 21 Dec 2015 11:18 AM
2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தமிழகம் ஆயத்தமாகி வரும் நிலையில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வழிநடத்திச் செல்லும் தலைமைப் பதவியை யாரிடம் வழங்குவது என்பது குறித்து அமித் ஷா முடிவு செய்யவுள்ளார்.
கடந்த வாரம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தற்போதைய மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, வானதி ஸ்ரீநிவாசன், இல.கணேசன் ஆகியோரை அமித் ஷா டெல்லிக்கு அழைத்திருந்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷா ஆலோசித்ததாகத் தெரிகிறது.
வரும் ஜனவரி 15-ம் தேதிக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடம் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மாநிலங்களுக்கான பாஜக உட்கட்சித் தேர்தல் கட்சியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்பட்டாலும் தலைமை பதவிக்கு யாரை நியமிப்பது என்பதை மத்திய தலைமையே முடிவு செய்கிறது என்பது பாஜகவில் எழுதப்படாத விதியாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவி மீண்டும் தமிழிசை சவுந்தராஜனுக்கே வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கட்சி வட்டாரத்தில் சலசலக்கப்படுகிறது.
சர்ச்சைகளில் ஏதும் சிக்காமல் இருப்பதாலேயே தமிழிசையை மீண்டும் கட்சி தலைமை பதவியில் அமர்த்தலாம் என மேலிடம் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், தமிழிசை மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டால் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் இணக்கமான போக்கை கடைபிடிப்பார் என்றும் அதே வேளையில் ஹெச்.ராஜாவுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டால் வீண் கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் பாஜக மத்திய தலைமை கருதுவதாகவும் கூறப்படுகிறது.
அதேவேளையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை தனித்து எதிர்கொள்வதில் தமிழக பாஜக மூத்த தலைவர்கள் தயக்கம் காட்டுவதில் அமித் ஷா அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும், 2014-ல் தமிழகத்தில் ஒரு கூட்டணியை ஏற்படுத்தியதுபோல் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் வலுவான கூட்டணியை ஏற்படுத்த அமித் ஷா அறிவுறுத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில பொதுச்செயலாளர் எஸ்.மோகன் ராஜூலு ஆகியோர் விஜயகாந்தை தேமுதிக அலுவலகத்தில் கடந்த சனிக்கிழமை சந்தித்துப் பேசினர் என்றும் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தமிழக பாஜக புதிய தலைவராக யார் பொறுப்பேற்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு கட்சி வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT