Published : 30 Apr 2021 09:25 PM
Last Updated : 30 Apr 2021 09:25 PM
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த, கரோனா தடுப்பூசி மையம் அரசு கலைக்கல்லூரி வளாகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால், தடுப்பூசி தட்டுப்பாடால், தடுப்பூசி போட காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
கோவை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க, கரோனா தடுப்பூசி,அரசு மருத்துவமனை வளாகத்தில் செலுத்தப்படுகிறது. இங்கு தினசரி 800-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் தடுப்பூசி போடும் மையம், புதிய கட்டிடத்தின் 4-வது தளத்தில் செயல்பட்டு வருகிறது. இதுவரை 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நாளை(1-ம் தேதி) முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்தலாம் என அரசு அறிவித்துள்ளது.
முன்னரே, அரசு மருத்துவமனைக்கு கரோனா தடுப்பூசி செலுத்த தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தலாம் என அரசு அறிவித்துள்ளதால், கரோனா தடுப்பூசி செலுத்து வருபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த கரோனா தடுப்பூசி மையம், கோவை அரசு கலைக்கல்லூரி வளாகத்துக்கு இன்று(30-ம் தேதி) இடமாற்றம் செய்யப்பட்டது.
இன்று முதல் அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. இன்று முதல் இங்கு பொதுமக்கள் வந்து கரோனா தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்று தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக 200-க்கும் மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் திரண்டனர். இந்நிலையில் தடுப்பூசி முதல் டோஸ் போடவில்லை என்றும், இரண்டாவது டோஸ் மட்டுமே போடுவதாக அறிவித்ததன் காரணமாக, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
மேலும், முதலில் டோக்கன் வழங்கியவர்களுக்கு மட்டுமே, இரண்டாவது டோஸ் போடப்படும் எனவும் அதன் பிறகு வந்தவர்களுக்கு தடுப்பூசி இல்லை எனவும் மருத்துவ பணியாளர்கள் தெரிவித்ததால் பொதுமக்கள் ஆத்திரமடைந்து மருத்துவ பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு கூட்டத்தை ஒழுங்குபடுத்தி தடுப்பூசி செலுத்தும் பணியானது நடைபெற்றது. இதற்கிடையே முதல் டோஸ் ஏற்கனவே தீர்ந்து விட்ட நிலையில், தற்போது இரண்டாவது டோஸும் தீர்ந்துவிட்டதாகவும், மாவட்ட சுகாதாரத்துறையிடமிருந்து தடுப்பூசிகள் வந்தால் மட்டுமே மற்றவர்களுக்கு போடப்படும் என கோவை அரசு மருத்துவமனை நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT