Published : 30 Apr 2021 07:59 PM
Last Updated : 30 Apr 2021 07:59 PM
தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் காவலர்கள் இருவர், தூய்மையான காற்று, மழை வளம் வேண்டி வேலை பார்க்கும் இடங்களில் மரக்கன்றுகளை நட்டு, அவற்றைப் பராமரிக்கும் பணியில் தனி ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் காவலர்கள் கலைவாணி (38), அகிலா (29). இவர்கள், தஞ்சாவூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் அலுவலக வளாகத்தில் இன்று மாலை (30-ம் தேதி) 10 மகிழ மரக்கன்றுகளை நட்டனர்.
இதுகுறித்துப் பெண் காவலர்கள் கலைவாணி, அகிலா கூறுகையில், ''எங்களுக்கு குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமை அதிகம் பிடிக்கும். அவரது கொள்கைப்படி நாங்கள் மரக்கன்றுகளை அவ்வப்போது நட்டு வருகிறோம். அதேபோல் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் இறந்தபோதும், அவரது கனவை நனவாக்கும் விதமாக எங்களின் வீட்டில் மரக்கன்றுகளை நட்டோம்.
திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்குச் சென்றால் அங்கு மணமக்களுக்குப் பரிசுப் பொருளாக மரக்கன்றுகளைக் கொடுத்து மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தி வருகிறோம். நாங்கள் எங்காவது பணிக்குச் சென்றால், அங்கு சிறிது காலம் பாதுகாப்புப் பணியில் இருக்க நேர்ந்தால், அங்குள்ள வசதிக்கு ஏற்ப எங்களது சொந்த செலவில் மரக்கன்றுகளை நடுவது வழக்கம்.
அதன்படி தஞ்சாவூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலத்தில் தற்போது தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இங்கு போதிய இடம் இருந்ததால் மருத்துவ குணம் மிகுந்த மகிழ மரக்கன்றுகளை நட்டுள்ளோம்.
தற்போது நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளதால், அதன் தேவையைப் பூர்த்தி செய்ய தூய்மையான காற்று தேவை. இந்தக் காற்றைத் தரக்கூடிய மரக்கன்றுகளை ஒவ்வொருவரும் வளர்க்க வேண்டும். மரக்கன்றுகளை வளர்ப்பதன் மூலம் மழை வளம் அதிகம் கிடைக்கும். இதனால் நாட்டில் உணவு தானிய உற்பத்தியும் அதிகரித்து பஞ்சம் இல்லாமல் இருக்கலாம்’’ என்று கலைவாணி, அகிலா ஆகிய இருவரும் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT