Published : 30 Apr 2021 07:04 PM
Last Updated : 30 Apr 2021 07:04 PM
தாம்பரத்தில் ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கி விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்றால் பெரிய அளவில் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்படுகிறது. தற்போது, கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த மருந்தைக் கள்ளச் சந்தையில் பதுக்கி பலர் விற்பனை செய்து வருகின்றனர்.
ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் பதுக்கி விற்பனை செய்வதைத் தடுக்க போலீஸார் பல்வேறு இடங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தாம்பரம் பகுதியில் இந்த மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று (ஏப்.29) சிவில் சப்ளைஸ் சிபிசிஐடி எஸ்.பி. சாந்தி தலைமையிலான போலீஸார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, காரில் 17 மருந்து பாட்டில்களைக் கடத்தி வந்த மருத்துவர் இம்ரான்கான், அவரது நண்பர் கிண்டியைச் சேர்ந்த விஜய் (25) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இந்த மருந்து திருவண்ணாமலை பகுதியில் இருந்து கடத்தப்படுவது தெரிந்தது. ரூ.4,700 மதிப்புள்ள இந்த மருந்தை ரூ.8,000க்கு கள்ளச்சந்தையில் வாங்கி வந்து, ரூ.20 ஆயிரத்துக்கு சென்னை பகுதியில் விற்க திட்டமிட்டதும், போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, இதற்கு இடைத்தரகராகச் செயல்பட்ட திருத்தணியைச் சேர்ந்த ராஜ்குமார் (27) என்பவரை நேற்று இரவு போலீஸார் கைது செய்தனர்.
இவர்களுக்கு மருந்து சப்ளை செய்த விவகாரம் தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி செய்யும் விக்னேஷ் என்பவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து இதுபோல் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்யவும் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த 4 பேர் மீதும் பேரிடர் தடுப்புச் சட்டம், அத்தியவாசியப் பொருட்கள் பதுக்கல் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், கள்ளச்சந்தையில் மருந்துகளைப் பதுக்கி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT