Last Updated : 30 Apr, 2021 06:22 PM

 

Published : 30 Apr 2021 06:22 PM
Last Updated : 30 Apr 2021 06:22 PM

கணவர் இறந்த அதிர்ச்சியில் உயிரிழந்த மனைவி; அன்பில் பறவைகளாய் வாழ்ந்த தம்பதிக்கு இறுதி அஞ்சலி

அண்ணாமலை- லட்சுமியம்மாள் (கோப்புப் படம்)

வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த அம்பூர்பேட்டை செங்குந்தர் மண்டபத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (80). இவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமியம்மாள் (70). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

அண்ணாமலை தன் மனைவி, மகன், மருமகள், பேரக் குழந்தைகளுடன் அம்பூர்பேட்டையில் வசித்து வந்தார். 50 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வந்த அண்ணாமலை வயது மூப்பு காரணமாக, கடந்த சில மாதங்களாக வியாபாரத்துக்குச் செல்ல முடியாமல் வீட்டில் இருந்தார். அவருக்குத் தேவையான உதவிகளை லட்சுமியம்மாள் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை தனது மிதிவண்டியில் வாணியம்பாடிக்குச் செல்லப் புறப்பட்டார். அப்போது தவறிக் கீழே விழுந்து காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீட்டில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், இன்று அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதையடுத்து, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல குடும்பத்தார் ஏற்பாடு செய்வதற்குள் அவர் உயிரிழந்தார்.

இந்தத் தகவல் அவரது மனைவி லட்சுமியம்மாளுக்குத் தெரியவந்தது. உடனே, கணவர் இருந்த அறைக்குச் சென்ற லட்சுமியம்மாள், கணவர் உடலைப் பார்த்துக் கதறி அழுதபடி அவர் மீது சாய்ந்தார். பிறகு அவரும் எழுந்திருக்கவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் லட்சுமியம்மாளை எழுப்ப முயன்றபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இந்தத் தகவல் அப்பகுதி முழுவதும் இன்று பரவியது. ஏறத்தாழ 55 ஆண்டுகளாக இணை பிரியாமல் ஒன்றாக, 2 தலைமுறைகளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த அண்ணாமலையும், அவரது மனைவி லட்சுமியம்மாளும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

அன்பில் பறவைகளாய் வாழ்ந்து ஒரே நாளில் உயிரிழந்த பாசமுள்ள தம்பதிக்கு, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். வாழ்விலும், மரணத்திலும் ஒன்றாகச் சங்கமித்த அண்ணாமலை, லட்சுமியம்மாள் இருவரும் அருகருகே அடக்கம் செய்யப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x