Published : 30 Apr 2021 04:38 PM
Last Updated : 30 Apr 2021 04:38 PM
தேர்தல் ஆணையம் கரோனா தொற்றை தடுக்கும் வகையில் எடுத்துள்ள நடவடிக்கைகளை பின்பற்றி, அரசியல் கட்சி தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கரோனா இரண்டாவது அலை பரவி வரும் சூழலில், தடுப்பூசி, ரெம்டெசிவிர், ஆக்சிஜன் பற்றாக்குறைகள் குறித்த பத்திரிகை செய்தி அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இதேபோல, கரூர் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவதால், கரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற உத்தரவிடக் கோரி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு, பிரச்சாரத்தின்போது, கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் தான், கரோனா பரவலுக்கு காரணம் எனவும், தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தலாம் எனவும் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று (ஏப். 30) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்களை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், இந்த கருத்துக்களின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி, தேர்தல் ஆணையத்தின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதேபோல, வாக்கு எண்ணிக்கையின்போது ஊடகத்தினரை அனுமதிக்க பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்தும், மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், தேர்தல் ஆணையத்தின் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த அறிக்கை குறித்து, திருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாநில அரசும், தேர்தல் ஆணையமும் பிறப்பித்துள்ள இந்த விதிகளை அரசியல் கட்சியினர், ஊடகத்தினர் கண்டிப்புடன் பின்பற்றி, ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தினர்.
மேலும், வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடவும், பட்டாசுகள் வெடிக்கவும், ஊர்வலம் செல்லவும் கூடாது என, அரசியல் கட்சியினருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் அரசியல் கட்சி தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் 1.12 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் 29 ஆயிரத்து 367 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 12 ஆயிரத்து 196 படுக்கைகளும் கரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மகாராஷ்டிரா, கேரளா போன்ற வெளிமாநில பயணிகளுக்கு இ - பாஸ் மற்றும் பரிசோதனையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் அறிக்கையில், 2.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படும் நிலையில், 59 ஆயிரம் குப்பிகள் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ரெம்டெசிவிர் மற்றும் தடுப்பூசி மருந்துகள் எப்போது சப்ளை செய்யப்படும் என்ற விவரங்களை தெரிவிக்கும்படி மத்திய அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.
மேலும், தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்திய நீதிபதிகள், புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தும், கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதாகவும், அரசின் வழிகாட்டு விதிமுறைகளை அதிகாரிகளும், காவல் துறையினரும் கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டு, இரு வழக்குகளின் விசாரணையை மே 5-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT