Last Updated : 30 Apr, 2021 03:20 PM

 

Published : 30 Apr 2021 03:20 PM
Last Updated : 30 Apr 2021 03:20 PM

ஜிப்மரில் மக்களுக்கான மருத்துவ சேவை இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும்: ஆய்வுக்கு பின் ஆளுநர் தமிழிசை பேட்டி

புதுச்சேரி

ஜிப்மர் மருத்துவமனை மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது, ஆனால் அது இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவனை கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மெத்தனமாக செயல்படுவதாக அன்மையில் சில தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று(ஏப். 30) ஜிப்மர் மருத்துவமனையைப் பார்வையிட்டு மருத்துவர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளோடு கலந்துரையாடினார்.

அப்போது கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, ஆக்ஸிஜன் இருப்பு, ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

அவரிடம் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள மருத்துவ வசதிகளை விரிவாக எடுத்துரைத்த இயக்குநர் டாக்டர் ராகேஷ் அகர்வால், மருத்துவமனையில் 11 கிலே லிட்டர் ஆக்சிஜன் கொள்கலன் நிறுவப்பட்டு இருப்பதாகவும், அதனை 20 கிலே லிட்டர் கொள்ளளவு கொண்டதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து மத்திய அரசு மற்றும் தனியார் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின்கீழ் மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த முயச்சி செய்ய வேண்டும். மருத்துவக் கருவிகளை அதிகப்படுத்த வேண்டும்.

மருத்துவப் பணியில் உள்ள அனைவருக்கும் முறையான பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். தீவிர சிகிச்சை மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம் வகுக்க வேண்டும். தொலைத் தொடர்பு மருத்துவ ஆலோசனை வசதிகளை விரிவுபடுத்தி நேரில் வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாத நோயாளிகளுக்கும்,பொதுமக்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளை ஆளுநர் வழங்கினார். அப்போது ஆளுநரின் ஆலோசகர்கள் சந்திரமௌலி , ஏ.பி மகேஸ்வரி, சுகாதாரத்துறைச் செயலர் அருண், சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘கரோனா சூழலில் அயராது பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர் மற்றும் இதர பணியாளர்களை நான் பாராட்டுகிறேன். ஜிப்மர் மருத்துவமனை மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. ஆனால் அது இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

ஆக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சை படுக்கைகளை அதிகப்படுத்தவும், மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அதேபோல அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் சவால்கள் பற்றியும் கூறியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக அறிக்கை தருவதாகவும் சொல்லியிருகிறார்கள். ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு நடைபெறவில்லை என பொதுமக்களுக்கு சங்கடம் இருந்தது. கரோனா தொற்றை தடுக்கும் விதமாக இந்தியா முழுவதும் பல மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது.

அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று புறநோயாளிகள் பிரிவுக்கு மக்கள் சாதாரன நோயுடன் வந்து கரோனா தொற்றுக்கு ஆளாகிவிடக்கூடாது, பாதுகாப்பாக இருக்க வேண்டும். மற்றொன்று புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வருபவர்களில் கரோனா தொற்றுடையவர்கள் யாரேனும் இருந்தால் மருத்துவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுவிடுகின்றனர்.

இங்கு கூட 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பாதிக்கப்பட்டிருகின்றனர். ஒவ்வொரு நாளும் மருத்துவர்கள் பாதிக்கப்படும்போதும், அவர்கள் 15 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்படும் போதும் மருத்துவர்கள் இல்லாத சூழல் ஏற்படுகிறது. ஆகவே இங்கு படுக்கை மட்டுமின்றி, ஒரு நோயாளி அனுமதிக்கப்பட்டால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களும் வேண்டும்.

அதற்கும் அரசு என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அதனை செய்வதாக தெரிவித்துள்ளோம். சில மருந்துகளை மத்தியில் இருந்து பெற்றுத்தர உதவி செய்வதாகவும் கூறியுள்ளோம். தற்போது இங்கு நடைபெற்றக்கூட்டம் பொதுமக்களுக்கு ஜிப்மர் மூலம் இன்னும் அதிக சேவைகள் செய்ய வழிவகுக்கும் என்று நான் உறுதி கூறுகிறேன்.

ஜிப்மரில் கரோனா நோயாளிகளுக்கு என்று தனிப்பிரிவு இங்குள்ளது. இதில் 500 படுக்கைகள் உள்ளன. இன்னும் படுக்கைகள் விரிவுப்படுத்தப்படுகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அனைவருக்கும் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படாது. ஆபத்தான சூழ்நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே தேவைப்படுகிறது.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் மே. 3-ம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு தேவைகேற்ப கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு எல்லாவற்றையும் கண்காணிக்க முடியாது. மக்களும் விழிப்புடனும், சுயக்கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்களை அலைக்கழிக்க வேண்டாம். மருத்துவர்களுக்கும், பொதுமக்களும் அகில இந்திய மருத்துவ கழகத்தின் அறிவுரையை ஏற்று செயல்பட வேண்டும். அவ்வாறு கட்டுப்பாட்டுடன் இல்லாவிட்டால் கரோனாவை கட்டுப்படுத்த முடியாது.

புதுச்சேரியில், ரெம்டெசிவிர் மருந்திற்காக யாரும் அலைய தேவையில்லை. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் அரசு மூலமாக மருத்து வழங்கப்படுகிறது. தேவையில்லாமல் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்பவர்களைக் கண்காணித்து மருத்துவத்துறையின் மூலம் நடவடிக்கைகள் எடுக்க நேரிடும்.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்ற மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகளை மருத்துவமனையின் மூலமே ஏற்பாடு செய்து சிகிச்சை அளிக்க வேண்டும். சிகிச்சை பெற வருபவர்களிடம் மருந்தை வாங்கிவரச் சொல்லி அலைக்கழிக்கக் கூடாது.

மேலும் அரசு மூலமாக வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்து சரியான நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறதா, பயன்படுத்தப்படுகிறதா என்பதை மருத்துவத் தணிக்கை குழு மூலம் கண்காணிக்கப்படும். பொதுமக்கள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். பேருந்துகளில் மக்கள் கூட்டமாக செல்வதைத் தவிரக்கவும். காவல் துறையினர் மூலம் இது கண்காணிக்கப்படும்.’’இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x