Published : 30 Apr 2021 01:06 PM
Last Updated : 30 Apr 2021 01:06 PM

வாக்கு எண்ணிக்கை; திமுகவின் வெற்றியை வீதிகளில் அல்லாமல் வீடுகளுக்குள் கொண்டாடுங்கள்: ஸ்டாலின் வேண்டுகோள்

ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

வாக்கு எண்ணிக்கையின்போது திமுகவுக்கு சாதகமான முடிவுகள் வரும்போது தொண்டர்கள் வீட்டுக்குள்ளேயே கொண்டாட வேண்டும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (ஏப். 30) வெளியிட்ட அறிக்கை:

"சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளிவரப்போகும் தருணத்தை எதிர்பார்த்து திமுகவை சார்ந்தவர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதை நான் அறிவேன். வாக்களிப்பதற்கு முன்பும் வாக்களித்த பின்பும் தமிழ்நாட்டின் வாக்காளர்களிடம் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் என்கிற உற்சாகமான தகவல் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது.

தமிழகமோ பெருந்தொற்றின் காரணமாகத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. படுக்கைகள் கிடைக்காமலும், ஆக்சிஜன் கிடைக்காமலும் நோயாளிகள் அவதிப்படும் நிலையை ஊடகங்களில் பார்த்து நான் பதைபதைத்துப் போகிறேன்.

இந்தச் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்தோ, சாதகமான முடிவுகள் வர வர ஒன்றுகூடியோ நம் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தச் சூழலில் இல்லங்களிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்துகொள்வதும், வெற்றியடைந்த செய்தியைக் கேட்டு நம் இல்லத்திலேயே மகிழ்வதும்தான் பொருத்தமான போக்கு.

திமுக வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என்னுடைய தலையாய நோக்கம் என்பதைப் புரிந்துகொண்டு நம் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே இத்தகைய அலட்சியப்போக்கால் அவதிப்படக் கூடாது என்று மாற்றுக் கட்சித் தோழர்களுக்கும் என்னுடைய வேண்டுகோளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும்".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x