Published : 30 Apr 2021 12:53 PM
Last Updated : 30 Apr 2021 12:53 PM
ரெம்டெசிவிர் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று (ஏப். 30) சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:
"தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவையை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் ரெம்டெசிவிர் மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக நேற்று எங்களுக்கு புகார் வந்தது. அங்கு சோதனை நடத்தி 17 'வயல்' ரெம்டெசிவிர் மருந்துகளை பறிமுதல் செய்தோம். இப்படி கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்பவர்களுக்கு கடைசி 'வார்னிங்'.
அனைத்து ஆவணங்களுடன் ஏழை, எளிய மக்களுக்கு கே.எம்.சி மருத்துவமனையில் கொடுக்கக்கூடிய ரெம்டெசிவிர் மருந்துகளும் வெளியே போகிறது. குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்தும் மருந்துகளை கொண்டு வந்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். கடுமையான நடவடிக்கை காவல் துறை மூலமாக அவர்கள் மீது எடுக்கப்படும்.
மருத்துவ ஆக்சிஜன் உதவியில் இருப்பவர்கள், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே உரிய ஆவணங்களுடன் ரெம்டெசிவிர் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும். தேவையில்லாதவர்களுக்கு பரிந்துரைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவிட் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 3 லட்சத்து 86 ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,501 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு செயல்பாடுகளை கட்டுப்படுத்த சொல்கிறோம். அரசு கட்டுப்பாடுகள் விதிக்கிறது என்ற எண்ணத்தில் மக்கள் இருக்க வேண்டாம். இதனை உங்கள் கடமையாக நினைத்தால்தான் தொற்று பாதிப்பை வேகமாக குறைக்க முடியும்.
சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சி, சேலம் போன்ற மாவட்டங்கள் இன்னும் நமக்கு சவாலாகத்தான் இருக்கிறது. சென்னை, ராணிப்பேட்டை, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதிப்பு உறுதி செய்யும் விகிதம் அதிகமாக இருக்கிறது. செங்கல்பட்டு, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, சேலம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களும் நமக்கு சவாலாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் களப்பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர்".
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT