Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM
கூடலூர் வனக்கோட்டத்தில் மனித - விலங்கு மோதலை தடுக்க புதிய முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் யானைகள்நடமாட்டத்தை கண்காணித்து மக்களுக்கு தெரிவிக்க முன்னெச்சரிக்கை கருவிகள், வாட்ஸ் அப் ஆகிய தொழில்நுட்பங்களை வனத்துறை பயன்படுத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில், கடந்த 10ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்டோர் காட்டு யானை தாக்கி இறந்துள்ளனர். மேலும், விவசாயப் பயிர்களை நாசம் செய்வதோடு, குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் வனத்துறையினர், பொதுமக்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு, வனத்துறைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக மனித - விலங்குமோதல் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைபெறுவதால், யானைகள் தாக்கி தோட்டத் தொழிலாளர்கள் உயிரிழப்பு அதிகளவில் ஏற்படுகிறது.
இதனைத் தடுக்கும் வகையில், முதல்கட்டமாக கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் கிராமப் பகுதிக்குள் யானைகள் நடமாடும் 30 இடங்களை கண்டறிந்து, அந்தப் பகுதிகளில் அதிநவீன கேமராக்கள் பொருத்தி, அதன் வருகையை வனத்துறையினர் பதிவு செய்வர். யானை வந்துள்ள பகுதி குறித்து மாவட்ட வன அலுவலர், வனச்சரகர்கள், யானை விரட்டும் குழுவினர் வரை குறுஞ்செய்தி சென்றடையும். அந்தக் கருவியை யானை கடந்து செல்லும்போது, ஒலி எழுப்பும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவி குறைந்தது 10 நிமிடம் ஒலி எழுப்பும். அப்போது, யானை வருவதை உணர்ந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அதற்குள் குறுஞ்செய்தியை கண்ட வன ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு வந்து யானைகளை விரட்டுவார்கள். இந்த புதிய முயற்சி, நாட்டிலேயே முதல் முறையாக கூடலூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் கூறும் போது, "கேரள வனப்பகுதியில் இருந்து தமிழக கிராமப் பகுதிக்குள் காட்டு யானைகள் ஊடுருவும் சில முக்கிய வழித்தடங்களில் ஏர்லி வார்னிங் சிஸ்டம் கருவிகளை கேமராவுடன் பொருத்தியுள்ளோம். இரவு நேரங்களில் இப்பகுதிக்கு வரும் காட்டு யானை, கருவியை கடந்து செல்லும்போது சென்சார் மூலம் கருவிக்கு தகவல் கிடைத்ததும், அதிலிருந்து ஓர் ஒலி எழும்புகிறது.
இந்த ஒலியை வைத்து அப்பகுதிக்கு காட்டு யானை வந்திருப்பதை அருகில் உள்ளவர்கள் அறிந்துகொள்ள முடியும். அதைத்தொடர்ந்து, அப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு காட்டு யானைவந்திருப்பது குறித்து தகவல் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கருவியை கடந்து செல்லும் வனவிலங்கு குறித்த படங்களும் அதில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் பதிவாகும்" என்றார்.
இந்நிலையில், சேரம்பாடி - கூடலூர் பிரதான சாலை சுங்கம்பகுதியிலுள்ள கிறிஸ்தவதேவாலய பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஏர்லி வார்னிங் சிஸ்டம் கருவியை காட்டு யானை கடந்து செல்வதும், அதில் கிடைத்த சிக்னல் மூலம் கருவியிலிருந்து ஒலி எழும்பியதும், யானை அச்சமடைந்து வேகமாக அங்கிருந்து நகரும் காட்சிகளும் கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகளைவனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். வனத்துறையினரின் இந்த முயற்சி வெற்றியடைந்துள்ளதால், மனித - யானை மோதல் தவிர்க்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரள வனப்பகுதியில் இருந்து தமிழக கிராமப் பகுதிக்குள் காட்டு யானைகள் ஊடுருவும் சில முக்கிய வழித்தடங்களில் ஏர்லி வார்னிங் சிஸ்டம் கருவிகளை கேமராவுடன் பொருத்தியுள்ளோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT