Published : 30 Apr 2021 03:13 AM
Last Updated : 30 Apr 2021 03:13 AM
தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வு மற்றும் கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 2, 5, 10 லிட்டர் பாட்டில் குடிநீர் விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளது. கேன் தண்ணீர் விற்பனையும் பாதியாகக் குறைந்துவிட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்கப்பட்ட 5 லட்சம் கேன் குடிநீர், தற்போது 2 முதல் 2.5 லட்சமாகக் குறைந்துவிட்டது.
தமிழகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், சென்னையில் சென்னை குடிநீர் வாரியமும் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வருகின்றன. இருப்பினும், மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதில் பாட்டில் குடிநீரும், கேன்களில் அடைக்கப்பட்ட குடிநீரும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் வெவ்வேறு கொள்ளளவு கொண்ட பல்லாயிரக்கணக்கான லிட்டர் பாட்டில் குடிநீரும், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கேன் குடிநீரும் விற்பனையாவது வழக்கம்.
கடந்த ஆண்டு பருவமழை இயல்புக்கு அதிகமாகப் பொழிந்ததால் ஏரி, குளங்கள் நிரம்பி தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதன் காரணமாகவும், கரோனா கூடுதல் கட்டுப்பாடுகளாலும் பாட்டில் குடிநீர் விற்பனை பெருமளவும், கேன் குடிநீர் விற்பனை பாதியாகவும் குறைந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.ராஜசேகரன், சங்கத்தின் ஆலோசகர் பிரபாகர் ஆகியோர் கூறியதாவது:
தமிழகத்தில் அரசு அனுமதி பெற்ற, அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 1,400 உள்ளன. அனுமதி பெறாமல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஏரி, குளங்கள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்ததால் பாட்டில் குடிநீர், கேன் குடிநீர் விற்பனை சரிந்துள்ளது.
சென்னையில் கரோனா கட்டுப்பாடுகளால் ஓட்டல்கள், டீக்கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. வங்கிகள், ஐ.டி.நிறுவனங்கள், பிற தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர் வீடுகளில் இருந்து பணிபுரிகின்றனர். பெரிய கடைகள், ஷாப்பிங் மால்கள், வணிக வளாகங்கள், கால் சென்டர் போன்றவற்றுக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டதால் கேன் குடிநீரின் விற்பனை பாதியாகக் குறைந்துவிட்டது. இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்கப்பட்ட 5 லட்சத்துக்கும் மேற்பட்ட கேன் குடிநீர் இப்போது 2 லட்சம் முதல் 2.5 லட்சம் வரை மட்டுமே விற்பனையாகின்றன.
பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பாட்டில் குடிநீர், கேன் குடிநீர் விற்பனை பெருமளவு சரிந்துவிட்டது. விமான சேவையும் குறைக்கப்பட்டுள்ளதால் அங்கு விற்கப்பட்ட 250 எம்.எல். பாட்டில் குடிநீர் விற்பனையும் பாதியாகிவிட்டது. வடமாநிலத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக 2 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பார்கள். அவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டதால் 2 லட்சம் லிட்டர் குடிநீர் விற்பனை நின்றுவிட்டது.
சுற்றுலாத் தலங்களை மூடிவிட்டதால் 2, 5, 10 லிட்டர் பாட்டில் குடிநீர் விற்பனை இல்லை. கேன் குடிநீரின் முக்கிய வாடிக்கையாளர்கள் பள்ளிக் குழந்தைகள்தான். அவர்கள் ஓடி, ஆடி விளையாடினால்தான் அதிகளவில் தண்ணீர் குடிப்பார்கள். இப்போது அதற்கும் வாய்ப்பில்லை. இப்படி பல வகையிலும் பாட்டில் குடிநீர் விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளது. கேன் குடிநீர் விற்பனையும் பாதியாகக் குறைந்துவிட்டதால் அதன் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல், அங்கு பணிபுரியும் பணியாளர்கள், விற்பனையாளர்கள் என பல தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT