Published : 30 Apr 2021 03:14 AM
Last Updated : 30 Apr 2021 03:14 AM
நாட்டு மாடுகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டும் பொறியியல் டிப்ளமோ படித்த வேடசந்தூரைச் சேர்ந்த இளைஞர் பிரதீப்ராஜா, அதை முழுநேர வேலையாகச் செய்து வருகிறார்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந் தூரைச் சேர்ந்தவர் பிரதீப்ராஜா (24). கட்டுமானப் பொறியியலில் பட்டயப் படிப்பு (டிப்ளமோ சிவில்) முடித்துவிட்டு அஞ்சல் வழிக் கல்வியில் பிபிஏ படித்து வருகிறார். விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் படிக்கும்போதே நாட்டு மாடுகள் குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். இதற்காக காங்கயம், ஈரோடு, வெள்ளக்கோவில் பகுதிகளுக்குச் சென்று, அங்கு நாட்டுமாடுகள் வளர்ப்புப் பற்றி நன்கு அறிந்துகொண்டார்.
2017-ம் ஆண்டு பட்டயப் படிப்பை முடித்ததும் காங்கயம், ஈரோடு பகுதிகளில் நாட்டுமாடுகளை வாங்கி வந்து பரா மரிக்கத் தொடங்கிய இவர் தற்போது 36 மாடுகளை வைத்துப் பராமரித்து வருகிறார்.காலையில் மாடுகளுக்கு தண்ணீர் காட்டுவது, குளிப்பாட்டுவது, தீவனம் வைப்பது என இவரே அதிக அக்கறையுடன் நாட்டு மாடு களைக் கவனித்து வருகிறார்.
இதுகுறித்து ஜி.பிரதீப்ராஜா கூறியதாவது: படிக்கும்போதே தொடங்கிய நாட்டுமாடுகள் வளர்ப்பு ஆர்வத்தை செயல் பாட்டுக்குக் கொண்டுவந்து தற்போது 36 நாட்டுமாடுகளைப் பராமரித்து வருகிறேன். மாடுகளுக்குக் காலையில் தண்ணீர் காட்டிவிட்டு தீவனம் போடவேண்டும். மேய்ச்சலுக்கும் விட வேண்டும். பருத்திக்கொட்டை, கோதுமை தவுடு, அரிசித் தவுடு ஆகியவை அவசியம் கொடுக்க வேண்டும். அதிகபட்சமாக நாட்டு மாடு ஒன்றில் நாளொன்றுக்கு இருவேளையும் ஐந்து லிட்டர் வரை பால் கறக்கலாம். நானே பால் கறந்துவிடுகிறேன். நாட்டு மாடுகளைப் பராமரிக்க எனக்குத் துணையாக ஒருவர் உள்ளார். அவருடன் இணைந்து அனைத்துப் பணிகளையும் செய்து வரு கிறேன்.
நாட்டு மாடு பால் ஒரு லிட்டர் ரூ.80-க்கு விற்பனை செய்கிறேன். தற்போது நாட்டு மாட்டின் கோமியத்தை விளை நிலங்களுக்குத் தண்ணீருடன் கலந்து பாய்ச்சுகிறோம். இது உரமாகப் பயன்படுகிறது. மாட்டின் கோமியம் வெளிநாடுகளுக்கு நல்ல விலைக்கு ஏற்றுமதி செய்கின்றனர். அதனால், கோமியத்தை ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். நாட்டு மாட்டின் சாணத்தை மதிப்புக்கூட்டியப் பொருளாக விபூதி தயாரிக்கும் திட்டம் உள்ளது. அதை விரைவில் செயல்படுத்துவேன்.
நாட்டுக் காளை மாடுகளும் வைத்துள்ளதால் சுற்றுப்பகுதி விவசாயிகள் இனச் சேர்க்கைக்காக மாடுகளைக் கொண்டு வருகின் றனர். அவ்வப்போது நாட்டு மாடுகளின் திறனை அதிகரிக்கப் பந்தயங்களுக்கு (ரேக்ளா ரேஸ்) அழைத்துச் செல்கிறோம். நாட்டு மாடுகள் கண்காட்சிக்குச் சென்று நான் வளர்க்கும் மாடுகள் பரிசுகளையும் பெற்றுள்ளன.
நாட்டு மாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்துப் பெரிய அளவில் பண்ணை வைக்கவேண்டும் என்பதுதான் எனது ஆசை. பாரம்பரியத்தைக் காக்க நாட்டுமாடுகளைப் பாதுகாப்பது அவசியம், என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT